மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

கூட்டணி தொடரும்: மாயாவதி

கூட்டணி தொடரும்: மாயாவதி

சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தொடரும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஓரணியாக திரள வேண்டும் என்ற முன்னெடுப்புகளை இப்போது மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னோடியாக அண்மையில் உத்தரப்பிரதேச நாடாளுமன்ற இடைத் தேதலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை ஆதரித்து பாஜக வேட்பாளர்களைத் தோற்கடித்தார் மாயாவதி.

இந்தக் கூட்டணி தொடருமா என்று அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருந்தபடி, என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில், ‘’சமாஜ்வாதி கட்சி உடனான கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மக்களும், கட்சித் தொண்டர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும். இது தொடர்பான முறையான அறிவிப்பு, தொகுதிப் பங்கீடுக்குப் பிறகு வெளியாகும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார் மாயாவதி.

சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆயினும் பாஜகவை அகற்ற இரு கட்சிகளும் கூட்டணி சேரவேண்டியதன் அவசியத்தை 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள் இக்கூட்டணி அமைய விரும்பும் இரு கட்சிகளின் பிரமுகர்களும்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 70 தொகுதிகளை பாஜக வென்றது. அப்போது பாஜக 43.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதே தேர்தலில் தனித் தனியாக நின்ற சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் பெற்ற வாக்குகள் மொத்தம் 41.8 சதவிகிதம். இதில் சமாஜ்வாதி 5 இடங்களை மட்டுமே வென்றது. பகுஜன் சமாஜ் எதிலும் வெல்லவில்லை. ஆக இரு கட்சிகளின் மொத்த வாக்குகளை விட சுமார் ஒரு சதவிகிதமே அதிகம் பெற்ற பாஜக 70 தொகுதிகளை வென்றிருக்கிறது. 7.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் இரண்டே இடங்களில் வென்றது.

வாக்கு சதவிகிதத்துக்கும், ஜெயித்த இடங்களுக்குமான வித்தியாசம் அதிகமானதற்கு பாஜகவின் எதிரிகள் பிரிந்து நின்றதே காரணம் என்றும், இனியும் இந்த தவறை நடத்தி பாஜகவை அதிக இடங்களில் வெற்றிபெற வைக்கக் கூடாது என்றும் இரு தரப்பினருமே முடிவெடுத்துள்ளனர்.

இந்த அடிப்படையில்தான், ‘’மதச்சார்பற்ற சக்திகள் இணைந்தால் மதவாத சக்திகளின் நிலை கவலைக்கிடமாகும். அதனால்தான் நாங்கள் இணைவதை அவர்கள் விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார் மாயாவதி.

மேலும் உத்திரபிரதேசத்தில் வர இருக்கிற கைரானா மக்களவை தொகுதி, நூர்புர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாதியோடு இணைந்து செயல்பட தனது தொண்டர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் மாயாவதி.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon