மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

திரிபுரா: எதிர்க்கட்சி அலுவலகங்கள் இடிப்பு!

திரிபுரா: எதிர்க்கட்சி அலுவலகங்கள் இடிப்பு!

அரசு நிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை இடிப்பதென, நேற்று (மே 7) திரிபுராவில் நடைபெற்ற பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திரிபுராவில் முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநிலம் முழுவதும் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை இடிப்பதென முடிவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இதர மாநிலக்கட்சிகளைச் சார்ந்த சுமார் 300 அலுவலகங்களுக்கு, ஏப்ரல் 17ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது திரிபுரா அரசு. இந்த நடவடிக்கைக்கு சில பாஜக அலுவலகங்களும் உட்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மாநில அமைச்சரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிபுரா மக்கள் சுதேசிக் கட்சி தலைவருமான டெப்ரமா, அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் பதிலளிக்கவில்லை என்றார். “அவர்கள் இப்போதுவரை அந்த இடத்தைக் காலி செய்யவில்லை. அதனால் நாங்கள் சட்டப்படி செயல்படவுள்ளோம். அவர்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள்; இது சரியல்ல” என்று தெரிவித்தார்.

இதனை எதிர்த்து, திரிபுராவில் ராணுவ ஆட்சிக்கான முன்னோட்டம் நடப்பதாகக் கூறியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் பிரஜித் சின்ஹா. “திரிபுராவில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அராஜகங்களை அரங்கேற்றி வருகிறது. ஒரு சர்வாதிகாரி போல, பாஜக செயல்படுகிறது. முறைப்படி, இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும். சமீபத்தில் சம்பக்நகர் எனுமிடத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு அலுவலகம் கட்டியுள்ளோம். இப்போது, அதையும் இடிக்கப்போகிறது திரிபுரா பாஜக அரசு. இதற்கு முன்பு, இம்மாநிலத்தில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரவாத் சவுத்ரி, இந்த நடவடிக்கை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறியுள்ளார். “30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வரும் கட்சி அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதனை உடனடியாக இடித்துவிட எப்படி முடியும்? திரிபுராவில் ஜனநாயகக் குரலை முடக்கும் முயற்சி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மாறாக, கட்சி அலுவலகங்களிடம் இருந்து மீட்கப்படும் இடங்களை வளர்ச்சி நடவடிக்கைக்குப் பயன்படுத்தப் போவதாகக் கூறி வருகின்றனர் திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள். கடந்த ஆட்சியில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்றது என்றும், தற்போதைய பாஜக ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்பட்டு அரசு அமைப்பு சுத்தமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon