மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சூர்யா

மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சூர்யா

தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது போல், மலையாள சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் நடிகர் சூர்யா.

மலையாளத் திரையுலகம் சார்பில் 'அம்மா மழவில்லு' நட்சத்திர கலைவிழா மே 6ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த நட்சத்திர கலைவிழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற மூத்த நடிகர்கள் முதல் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் என இளம் நடிகர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர். AMMA (Association of Malayalam Movie Artists) நடத்திய இந்தக் கலைவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நட்சத்திரக் கலைவிழாவில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டார். கேரளாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் சூர்யா இதற்கு முன் கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தனது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

அன்றைய விழாவில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, “தமிழால் பாரதி பெருமை பெற்றதும், பாரதியால் தமிழ் பெருமை பெற்றதும்னு சொல்லுவாங்க. அதுபோல மலையாள சினிமா இந்தியாவுக்கே முன்னுதாரணம். உங்களின் ரசனையினால்தான் சினிமா இன்னும் அழகானதா என்று தெரியவில்லை” என்றார்.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கும் வகையில், “நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவி செய்தனர். இதைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. மாணவர்கள் மன உளைச்சலின்றி தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுத்த முதல் அமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுக்கும், கேரள மக்களுக்கும் அவர்களின் பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன்” என்றார்.

மேலும் அவர், மம்மூட்டியின் திருமண நாள் இன்று என மேடையில் அறிவித்து, பார்வையாளர்களின் ஆரவாரத்தை பரிசாகப் பெற்றார். மலையாள நடிகர் சங்கத்திற்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக கொடுத்து மலையாள ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon