மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

நஷ்டத்துக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கி!

நஷ்டத்துக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கி!

வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய சர்ச்சையில் சிக்கிய சாந்தா கோச்சர் குறித்து விவாதிக்க ஐசிஐசிஐ வங்கிக் குழு மறுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, தனது ஜனவரி - மார்ச் காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் அவ்வங்கியின் நிகர லாபம் ரூ.1,020 கோடியாக உள்ளது. ஆனால், 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அதன் நிகர வருவாய் ரூ.2,024.64 கோடியாக இருந்தது. இதன் மூலம் 50 சதவிகித வருவாய் இழப்பை ஐசிஐசிஐ வங்கி சந்தித்துள்ளது. முன்னதாக புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் ஜனவரி - மார்ச் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,060.8 கோடி வரையிலான வருவாயை மட்டுமே ஈட்டும் என்று தெரிவித்திருந்தது. புளூம்பெர்க் நிறுவனத்தின் மதிப்பீட்டுடன் ஒன்றுவதாகவே இவ்வங்கியின் வருவாய் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் வட்டி வாயிலான வருவாய் ரூ.5,962.2 கோடியிலிருந்து ரூ.6,021.7 கோடியாகவும், இதர வருவாய் ரூ.3,017.2 கோடியிலிருந்து ரூ.5,678.6 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வங்கியின் வருவாய் விவரங்களை வெளியிட்டபோது உயர்மட்டக் குழுவினரிடையேயான கூட்டத்தில், அவ்வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் தன் மீதான புகார்கள் குறித்தும் சர்ச்சைகள் குறித்தும் எதுவும் பேசவில்லை. “இன்று, அதுபற்றிய எவ்வித விவாதமும் இல்லை. நமது வங்கிக் குழு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது” என்று கூறினார். சாந்தா கோச்சர் குறித்து வங்கி உயர்மட்டக் குழுவினரும் எவ்வித விவாதத்திலும் ஈடுபடவில்லை. இந்த விவகாரத்தில் சாந்தா கோச்சர் கூடிய விரைவில் பதவி விலக வாய்ப்புள்ளது. அவரது கணவர் தீபக் கோச்சர் மற்றும் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகிய இருவரும் நிறுவனம் ஒன்றின் பங்குப் பரிமாற்றத்தில் சர்ச்சையில் சிக்கியதும், வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி பெரும் கடன் வழங்கியதில் சந்தா கோச்சர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon