மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

நான்காவது முறையாக அதிபரான புதின்!

 நான்காவது முறையாக அதிபரான புதின்!

ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் விளாடிமிர் புதின்.

ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன்படி கடந்த மார்ச் 18 ஆம் தேதி அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. 109 நாடுகளைச் சேர்ந்த 1,500 பார்வையாளர்கள் வாக்குப்பதிவைக் கண்காணித்தனர். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில், 76.6 சதவிகித வாக்குகளை புதின் பெற்றுள்ளதாக அந்நாட்டு மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு புதின் 63.6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அதைவிட அதிக வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில், நேற்று (மே 7) மாஸ்கோ கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ரஷ்ய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார், விளாடிமிர் புதின்.

கிரெம்ளின் மாளிகையில் அதிபராக பதவியேற்ற பிறகு உரையாற்றிய புதின், “நான்காவது முறையாக தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரஷ்யாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். ரஷ்யாவின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதை என் வாழ்க்கையின் லட்சியமாக கருதுகிறேன்” என்றார்.

ரஷ்யாவின் அதிபராக புதின் கடந்த 2000ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்கக் கூடாது என்பதால் 2008ஆம் ஆண்டு தேர்தலில் புதின் போட்டியிடவில்லை. அதே ஆண்டில், அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2012ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அவர் தொடர்ந்து அதிபராக இருந்துவருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற(2018) அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆறு ஆண்டுகள் அதாவது, 2024 ஆண்டு வரை அதிபராக நீடிப்பார்.

அதிபர் புதின் 2024 ஆம் ஆண்டு வரை தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தால் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினை விட நீண்டகாலம் ரஷ்யாவை ஆண்ட பெருமையைப் பெறுவார்.

இனி ஐந்தாவது முறையாக புதின் அதிபராக வேண்டுமானால் ரஷ்ய அரசியல் சட்டத்தை திருத்தினால் மட்டுமே முடியும்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon