மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

இட ஒதுக்கீடு: ஆர்.எஸ்.எஸ். விளக்கம்!

இட ஒதுக்கீடு: ஆர்.எஸ்.எஸ். விளக்கம்!

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், காங்கிரஸாரின் முகநூல் பக்கங்களிலும் பாஜகவை விட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. குறிப்பாக அண்மையில் எஸ்.சி., எஸ்.டி. சட்டம் திருத்தப்பட்டதை ஆர்.எஸ்.எஸ். வரவேற்கிறது என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணைத் தலைவரான மன்மோகன் வைத்யா ஆங்கிலம், இந்தி, அந்தந்த மாநில மொழிகள் என்று மும்மொழிகளில் நேற்று (மே 7) ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து பொய்யுரைகளைப் பரப்பி, சமுதாயத்தைத் திசைதிருப்பும் போக்கைக் கையாண்டுவருகிறார்கள். இப்போது அவர்களது முகநூல் பக்கங்கள் பெரும்பாலானவற்றில் எனது மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ராவ் பகவத் அவர்களின் பெயரில், எங்கள் கருத்தாக ஒரு பொய்யைப் பரப்பி வருகிறார்கள்.

அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் இட ஒதுக்கீட்டை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது என்பதுதான் அந்தப் பொய். இது முற்றிலும் ஆதாரமில்லாத அண்டப்புளுகு. இந்தக் கூற்றுக்கு ராகுல் காந்தி அவர்கள் ஏதாகிலும் சான்று அளிப்பார் என்றால் அது தான் நியாயமானது, நேர்மை நிறைந்த செயல்பாடு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இந்து சமுதாயத்தில் நிலவிவரும் வேற்றுமைகள் காரணமாகவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அரசியலமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது, இது தொடர வேண்டும் என்பது தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிலைப்பாடாகத் தொடர்ந்து இருந்துவருகிறது; மேலும் சங்கத்தின் அகில பாரத பிரதிநிதி சபையும் அவ்வப்போது நிறைவேற்றும் தீர்மானங்கள் வாயிலாக இதை நிலைநிறுத்தியும் வந்திருக்கிறது.

சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, சமநிலை ஏற்படுத்துவதில் சங்கம் முனைப்போடு இருக்கிறது, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறது. ராகுல் காந்தியும், அவரது காங்கிரஸ் கட்சியும் பொய்கள் பரப்புவது என்பது கீழ்த்தரமான அரசியல். அதைக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார் மன்மோகன் வைத்யா.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon