கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ஒன்றிரண்டு நடிகைகள் மட்டுமே முன்னுரிமை கொடுத்துவந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதில் தற்போது தனது பெயரையும் இணைத்துள்ளார் நந்திதா ஸ்வேதா.
2008ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமான நந்திதா, அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பக்கத்துவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தை உடைய நந்திதா அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமானார்.
தற்போது ஏழு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தைப் போன்று நந்திதாவுக்கு இதற்கு முன் கதாபாத்திரங்கள் அமையவில்லை. குடும்ப உறவுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். பாலா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் கீதா உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
ரெனேஷ் என்ற சிறுவன் நந்திதாவின் மகனாக நடிக்கிறார். விஜய் வசந்த், எம்.எஸ் பாஸ்கர், சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்காக நந்திதா உடல் எடையை எட்டு கிலோ வரை குறைத்துள்ளார். மே 15ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நாகர்கோவில், திருநெல்வேலி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.