மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

காவிரி: மத்திய அரசு அறிக்கை!

காவிரி: மத்திய அரசு அறிக்கை!

காவிரி வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த மார்ச் 30ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தது. அன்றைய தினமே மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த இரு வழக்குகளும் ஒன்றாக இணைந்து கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் காவிரி வரைவுத் திட்டம் தாக்கல் செய்வது தொடர்பாக நேற்று (மே 7) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலின்பேரில் மத்திய அரசின் சார்பில் நேற்றைய தினமே விரிவான அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழு அளவில் செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்து காவிரி தொடர்பான தீர்ப்பைச் செயல்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி வழக்குகள் இன்று விசாரணைக்கு வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் அறிக்கை குறித்து அதில் வாதம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக நான்கு மாநிலங்களுக்கும் மத்திய அரசின் அறிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட இயலாது என்று தெரிவித்திருந்தது. மேலும், தமிழக அரசின் சார்பிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon