மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

நீட் தேர்வு தாமதம்: சிபிஎஸ்இ விளக்கம்!

நீட் தேர்வு தாமதம்: சிபிஎஸ்இ விளக்கம்!

நீட் தேர்வு, சில தேர்வு மையங்களில் தாமதமாகத் தொடங்கியதற்கு, நிர்வாக ரீதியான குறைபாடுகளே காரணம் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த 6ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் மொத்தம் 136 நகரங்களில், 2 ஆயிரத்து, 255 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் தேர்வு பணியில் மொத்தம் 700 கண்காணிப்பு அலுவலர்களும், 1 லட்சத்து, 20 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டிருந்தனர். இதில் நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு, அசாம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மையத்தில் தேர்வு தாமதமாகத் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ நிர்வாகம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், தேர்வு தாமதமானதற்கு நிர்வாக ரீதியிலான குறைபாடுகளே காரணம் எனத் தெரிவித்துள்ளது. அதே சமயம் தேர்வு தாமதமாகத் தொடங்கப்பட்ட மையங்களில், மாணவர்களுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு விதிமுறைகள் குறித்து பெற்றோருக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தேர்வு எழுதவந்த மாணவிகளைப் பெண் அலுவலர்களே சோதனையிட்டனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 13,26,000 மாணவர்களில் 4% பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தேர்வானது மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon