மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

வீரர்கள் தடை: வருந்தும் லீமன்!

வீரர்கள் தடை: வருந்தும் லீமன்!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் மூவரையும் எண்ணி தினமும் வருத்தப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேரன் லீமன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரைச் சேர்ந்த வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த லீமன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“அவர்கள் (ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட்) மூவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எண்ணி தினம் தினம் வருந்துகிறேன். தற்போது அவர்களிடம் தொடர்பில்தான் உள்ளேன். அவர்கள் செய்த தவற்றுக்கான தண்டனையைப் பெற்றுவிட்டார்கள். விரைவில் அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட்தான் முக்கியம். இவர்கள் மூவரும் மீண்டும் அணியில் இடம்பிடித்து எல்லோரும் மதிக்கும்படியான ஒரு விளையாட்டை வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லாங்கரைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த லீமன், “அவருக்கு (லாங்கர்) தற்போது நல்ல ஓர் அணி அமைந்துள்ளது. இவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டத்தைக் காண ஆவலாக உள்ளேன். தற்போதைய வீரர்கள் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். இருப்பினும் அணியில் விளையாடாத அந்த மூவருக்கும் (ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட்) அவர்கள் ஆதரவளிக்க வேண்டும்.

தடை விதிக்கப்பட்ட அந்த மூவரும் தடை முடிந்து மீண்டும் அணியில் இணையலாம். ஏனெனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வருங்காலமே அவர்கள் கையில்தான் உள்ளது என ஜஸ்டின் கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon