மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

போராட்டம் நடைபெற்றே தீரும்: ஜாக்டோ - ஜியோ!

போராட்டம் நடைபெற்றே தீரும்: ஜாக்டோ - ஜியோ!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், திட்டமிட்டபடி இன்று (மே 8) போராட்டம் நடைபெறும் என்று அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய மாற்றத் தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றனர்.

அரசு தரப்பில் எவ்வித பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இன்று (மே 8) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த ஊழியர்களும் இந்தத் தொடர் மறியலில் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மீன்வளத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பெயரில் நேற்று (மே 7) நாளிதழ்களில் தமிழக அரசின் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் சுமார் 19 லட்சம் பேருக்கு மட்டும் அரசின் வரி வருவாயில் 70 சதவிகிதம் செலவு செய்யப்படுவதாகவும், வெறும் 6 சதவிகிதம் மட்டுமே மக்கள் நலத் திட்டத்துக்குச் செலவிடப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்து.

அதேவேளையில், போராட்டத்தை ஒடுக்கும்விதமாக ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை போலீஸார் நேற்று முதல் கைது செய்து வருகின்றனர். வீடு புகுந்தும், சென்னைக்கு வாகனத்தில் வரும் நிர்வாகிகளையும் போலீஸார் கைது செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸாரின் இந்தச் செயலுக்கு பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது குறித்தும், போராட்டம் குறித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்மாநிலச் செயலாளர் வெங்கடேசனை தொடர்புகொண்டு கேட்டபோது, “ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் அரசு ஒடுக்க நினைக்கிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் கைது நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. தென்காசி போன்ற தென்பகுதியில் இருந்து போராட்டத்துக்குக் கிளம்பி வருபவர்களை அங்கேயே காவல் துறையினர் கைது செய்து அடைத்து வைத்துள்ளனர். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் கோரி வருகிறோம். ஆனால், அவரின் பெயரில் ஆட்சி செய்பவர்கள் அதை நிறைவேற்றாமல் தட்டிக்கழிக்கின்றனர்.

திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அரசுக்கு எங்களின் கோரிக்கையைத் தெரிய வைப்போம்” என்றார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon