மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

பிக் பாஸ் சீசன் 2: எதற்குக் காத்திருக்கிறார்கள்?

பிக் பாஸ் சீசன் 2: எதற்குக் காத்திருக்கிறார்கள்?

பிக் பாஸ் சீசன் 2 தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்துவிட்டன. முதலில் டெக்னிக்கல் டீம்களுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு அத்தனை புதிய அம்சங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டன. சமீபத்தில் சென்னையிலுள்ள ஸ்டுடியோவில் கமல்ஹாசன் நடித்த பிக் பாஸ் 2 புரமோஷன் வீடியோ எடுக்கப்பட்டது. புரமோஷன் வீடியோ தயார் செய்யும் வேலை தொடங்கிய அதேசமயம், பிக் பாஸ் வீட்டின் புதிய செட்டப் எப்படியிருக்க வேண்டும் என்ற இறுதி முடிவையும் எடுத்திருக்கிறார்கள். முதல் சீசனில் பிக் பாஸுக்குப் பயன்படுத்திய செட் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், அதில் இரண்டாம் சீசனுக்கான கட்டுமான வேலைகள் தொடங்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லையென்றாலும், பிக் பாஸ் வீட்டை விஜய் டிவியின் பார்வையாளர்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘வில்லா டூ வில்லேஜ்’ நிகழ்ச்சிக்கு இப்போது பிக் பாஸ் வீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ் இரண்டாம் சீசனின் முதல் புரமோஷன் வீடியோவை ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. சென்ற வருடம்போலவே, டீசர் ரிலீஸ் செய்த ஒரு மாதத்துக்குள்ளாக பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்கின்றனர் தற்போது முழு மூச்சில் வேலை செய்துகொண்டிருக்கும் டெக்னிக்கல் குழுவினர்.

ஜூன் 24ஆம் தேதி (ஞாயிறு) பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு, 25ஆம் தேதி (திங்கள்) முதல் பிக் பாஸ் இரண்டாவது சீசன் தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 50 நாள்களுக்குள்ளாக 100 நாட்கள் நடத்த வேண்டிய நிகழ்ச்சிக்கான வேலைகளைத் தொடங்க வேண்டும் என்பதால் ‘வில்லா டூ விலேஜ்’ நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்காக இடம் தேடிக் கொண்டிருக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். வீட்டுக்குள் நடப்பவற்றை பிக் பாஸ் வீட்டிலும், வெளியில் நடப்பவற்றை பூந்தமல்லி பகுதியைத் தாண்டிய விளைநிலங்களிலும் இதுவரை படமாக்கி வந்தனர் ‘வில்லா டூ வில்லேஜ்’ நிகழ்ச்சிக் குழுவினர். எனவே, பிக் பாஸ் தொடங்குவதற்குள் அந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்றியாக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டனர். அவர்களுக்கான டாஸ்குகள் எப்படி இருக்கப் போகின்றன என்ற கலந்தாய்வும் தொடங்கிவிட்டது. பல மாதங்களாக கேட்காமல் போயிருந்த பிக் பாஸ் குரலும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தயாராகிவிட்டது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon