மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

நீட்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

நீட்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

நீட் தேர்வு எழுதுவதற்காகத் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 6ஆம் தேதி மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வான ‘நீட் தேர்வு’ பல்வேறு சிக்கல்களுக்கும் குளறுபடிகளுக்கும் இடையில் நடந்து முடிந்தது. இந்தியா முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் தமிழ்நாட்டில் 170 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்.

பிற மாநில மாணவர்களை எல்லாம் சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்குத் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கேரளாவுக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களும் அவர்களைக் கூட்டிச்சென்ற பெற்றோர்களும் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த அலைச்சலினால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நீட் தேர்வின்போது மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டியிருந்தது. மேலும், நீட் தேர்வை எழுத கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு மாணவனை அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி அலைக்கழிப்பால் உயிரிழந்ததற்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது அரசின் கடமை என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. போதுமான தேர்வு மையங்களை அமைக்க சிபிஎஸ்இ தவறிவிட்டது.

இதுதொடர்பாக, சிபிஎஸ்இ தலைவரும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் விளக்கம் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதுவதற்கு எதனால் அனுப்பப்பட்டார்கள் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon