மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 15 டிச 2019

சிறப்புக் கட்டுரை: பாலியல் கதைகள் தேவையில்லையா?

சிறப்புக் கட்டுரை: பாலியல் கதைகள் தேவையில்லையா?

மதரா

பாலியல் சார்ந்த கதைகளைப் பிரபலமான நடிகர்கள் நடிக்கும்போது இயல்பாகவே அதன்மேல் கவனம் உருவாகிறது. பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் ‘ஏ’ சான்றிதழுடன் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ளது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருவதுடன் கடந்த வாரம் வெளியான படங்களில் வசூலில் முன்னணியிலும் இருக்கிறது. இந்த நிலையில், ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ சார்பாக இயக்குநர் பாரதிராஜா, இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இலக்கியமும் இதிகாசமும் சராசரி மனித வாழ்க்கையையும் கொண்டாடிய நம் தமிழ்த் திரைப்படங்கள் இன்று சதையை மட்டும் கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்து கிடக்கின்றன” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் இந்த கருத்தையொட்டியே பெரும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் அரங்கேறி வருகின்றன. பாலியல் சார்ந்த கதைகளைத் திரைப்படங்களில் கையாளக் கூடாதா, அப்படியான படங்கள் இதற்கு முன் வந்ததில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏற்கெனவே இந்தக் கூட்டணி உருவாக்கிய ஹர ஹர மஹாதேவகி படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. அதற்கு முன்னரும் இந்த பாணியில் பல படங்கள் வெளியாகியுள்ளன. பாலியல் கதைகள் அல்லாமல் ஏராளமான முன்னணி நாயகர்களின் படங்கள்கூட ஆபாசமான காட்சிகளைத் தாங்கி வெளியாகியுள்ளன. 70களில் வெளியான சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் பல இந்தப் பட்டியலில் இடம்பெறக்கூடியவை. அப்படி இருக்க திடீரென்று ஏன் இந்த எதிர்ப்பு?

பாலியலுக்கும் இடம் உண்டு

திரைப்படங்களில் மட்டுமல்ல; பாரதிராஜா மேற்கோள்காட்டும் இலக்கியங்கள், இதிகாசங்களிலும் பாலியல் கதைகள் உள்ளன. முதல் மரியாதை படத்தில் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் நாவலின் ஓர் அத்தியாயத்தைக் காட்சியாக வைத்திருப்பார். கி.ராவின் படைப்புகளில் பரிச்சயம் உள்ள பாரதிராஜாவுக்கு அவர் தொகுத்த பாலியல் கதைகள், மறைவாகச் சொன்ன கதைகள் எல்லாம் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. காதல், தாய்மை, நட்பு, பண்பாடு என அனைத்துக்கும் இலக்கியங்களில், திரைப்படங்களில் இடம் இருப்பது போல பாலியல் கதைகளுக்கும் மறுக்க முடியாத இடம் உள்ளது. சிகப்பு ரோஜாக்கள் படைத்த பாரதிராஜாவிடமிருந்து இப்படியொரு கருத்து வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

“ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே... நீங்கள் படைக்கும் திரைப்படங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா?” என்று பாரதிராஜா கேள்வி எழுப்புகிறார். வயது வந்தவர்களுக்கானது என்ற சான்றிதழுடன் வெளியாகும் படத்தை ஏன் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியைத்தான் அதற்குப் பதிலாகக் கூற வேண்டியுள்ளது.

போராட்ட உணர்வை மழுங்கடிக்குமா?

மத்திய அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் மேல் திணிக்கப்படும் மோசமான திட்டங்களுக்கு எதிராகப் பெருந்திரளான போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இத்தகையப் படங்கள் வெளியாவது போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர் கூட்டத்தை திசை திருப்பும் செயல் எனும் குற்றச்சாட்டு வலுவானது. ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைக்குப் பின் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக ஆபாசப் படங்கள் அதிக அளவில் அங்கே பரப்பப்பட்டன. பாலியல் தொழில்கள் கட்டற்ற முறையில் அவிழ்த்துவிடப்பட்டன. இதேபோன்ற யுக்திகள் வடகிழக்கு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டன. இதை உணர்ந்தே சமீபத்தில் ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில், “மக்கள் போராட்டம் எழுச்சியடையும் இந்நேரத்தில் இங்கு ஏன் ஐபிஎல் போட்டி” எனும் கோரிக்கைகள் எழுந்தன. விளைவு மொத்தப் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டன. போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் காரணிகளாக இவை இருக்கக்கூடும் என்பது ஏற்கத்தக்க வாதம்தான்.

இந்தியத் தணிக்கை துறை ஒருதலை பட்சமாக, ஆளும் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் பல இயக்குநர்கள் இதற்குக் குரல்கொடுத்துள்ளனர். பாரதிராஜா, “சென்சார் போர்டு என்ன செய்துகொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக்கூடக் கத்தரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசமான படங்களுக்கு அனுமதியளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்காலமாக அடங்கிக் கிடந்த தமிழ் இனம் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது எங்களைப் பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட நான் சந்தேகப்படுகிறேன்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

திரைப்படத் தணிக்கை குறித்து, படைப்பு சுதந்திரம் குறித்துப் பேசும் பாரதிராஜா, இதுபோன்ற படங்களை ஏன் அனுமதிக்கிறீர்கள் எனத் தணிக்கைத் துறை போலவே பேசுவது நகைமுரண். படம் குறித்து எழும் இத்தகைய விமர்சனங்களை அது வெளியாகியுள்ள நெருக்கடியான காலகட்டத்தோடு தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. இதே கூட்டணி உருவாக்கிய ஹரஹர மஹாதேவகிக்கு இல்லாத எதிர்ப்பு இதற்கு உருவாகியதற்கான காரணமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

திரைப்படங்களை விட இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் மொபைல்போன்கள் ஆபாச வீடியோக்களை நொடியில் கொட்டும் சாதனமாக விளங்குகின்றன. இந்த வீச்சை அளவிட்டால் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் எந்த வகையிலும் அதன் அருகிலேயே வர முடியாது.

“தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் துணைபோவதால்தான் ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இதுதான் நடக்கும். இதற்கும் மேலும் நடக்கும்” என்று கூறியுள்ளார். தமிழர் அல்லாதோர் ஆட்சிக்கோ, பதவிக்கோ வரக் கூடாது என்று அவர் தொடர்ந்து முன்னெடுத்துவரும் முழக்கத்தின் நீட்சியாக மட்டுமே விஷால் தலைமை வகிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை விமர்சிப்பதாகப் பார்க்க வேண்டியுள்ளது.

இதை எல்லாம் கடந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பிரச்சினைகளே இல்லையா எனக் கேட்டால் கட்டாயம் உள்ளன. அவற்றை விமர்சிக்கத்தான் வேண்டும் (அது குறித்து விரிவாக மின்னம்பலத்தில் பதிவு செய்துள்ளோம்). பாலியல் சார்ந்த கதையிலும் ஓரினச் சேர்க்கையாளர்களை இழி கண்ணோட்டத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர் என்பதையும் கவனப்படுத்தியிருக்கிறோம்.

வயது வந்தோருக்கான நகைச்சுவைப் படம் என்னும் பெயரால் மலினமான உள்ளடக்கத்தைக் கடைபரப்புவதுதான் இந்தப் படத்தின் பிரச்சினை. படைப்பூக்கமோ, நேர்த்தியோ அற்ற மலினமான உள்ளடக்கம் விமர்சிக்கப்பட வேண்டும். படைப்பாளியின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு படைப்பின் தரத்தை விமர்சிப்பது வேறு. இதுபோன்ற படங்களைத் தடைசெய்ய வேண்டும் என்பது வேறு.

படைப்பின் தரத்துக்கும் படைப்புச் சுதந்திரத்துக்குமான வேறுபாட்டை நாம் கணக்கில் எடுத்துக்கொள்கிறோமா என்பதுதான் கேள்வி.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon