மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஜெ. திட்டங்கள்: 95 சதவிகிதம் நிறைவேற்றம்!

ஜெ. திட்டங்கள்: 95 சதவிகிதம் நிறைவேற்றம்!

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் 95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று (மே 7) சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. பேரவையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் 95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் போல அதிமுக கட்சியும் ஆட்சியும் இருக்கின்றன. அரசின் சாதனைகளை கட்சியினர் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று பேசியுள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவினர் கைகளில் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மா தவழ வேண்டும் என்பதற்காக 11 மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சந்தாவும் செலுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

நீட் தேர்வு பிரச்சினை குறித்துப் பேசிய அவர், “தேர்வு மையங்கள் குறித்து சிபிஎஸ்இ முன்கூட்டியே எங்களிடம் தெரிவிக்கவில்லை. அவர்கள் முன்கூட்டியே கூறியிருந்தால் நாங்கள் கூடுதலாக 50 தேர்வு மையங்கள் ஒதுக்கித் தந்திருப்போம். சிபிஎஸ்இயின் குளறுபடி காரணமாகத்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon