மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

செல்ஃபி சர்ச்சை: யேசுதாஸ் சொன்ன பாடம்!

செல்ஃபி சர்ச்சை: யேசுதாஸ் சொன்ன பாடம்!

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேசிய விருது விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றபோது, அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்ஃபோனை வாங்கி அந்தப் புகைப்படத்தை அழித்துவிட்டுத் திரும்பிக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது ‘செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான, எதிர்மறையான கருத்துகள் வந்தன. அதேசமயம் அவரது ரசிகர் அனூப் வர்கீஸ் வெளியிட்ட ஒரு கருத்து மேலும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

யேசுதாஸ் செல்ஃபி எடுப்பதை ஏன் எதிர்க்கிறார் என அவருடனான தனது அனுபவத்தின் மூலம் அவரது ரசிகரான அனூப் வர்கீஸ் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் விமான நிலையத்தில் யேசுதாஸுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். முதலில் நான் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என்று தான் கேட்டேன். அதற்கு தாஸேட்டன், எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் எடுக்கலாம். ஆனால், செல்ஃபி மட்டும் வேண்டாம். மனிதன் ஒரு சமூகப் பற்றாளன். எப்போதும் இன்னொருவரின் உதவியின்றி வாழ நினைக்கக் கூடாது. போட்டோ எடுக்கும்போதுகூட இன்னொரு நபர் உதவியில்லாமல் எடுக்க முயல்கிறோமே தவிர, இன்னொருவரை அழைத்து புகைப்படம் எடுத்துத் தரச்சொல்லும் பழக்கம் குறைந்து வருகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரிடமிருந்தும் ஒதுங்கிப்போய் என்ன செய்யப் போகிறோம் எனச் சொல்லி எங்களுக்கு அருகிலிருந்த ஒருவரிடம் அவரே கேட்டு போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றார்” என்று யேசுதாஸின் செல்ஃபி மனநிலை பற்றிய விளக்கத்தைக் கொடுத்தார்.

ஆனால், அதற்கு முன்பே தொடங்கிவிட்ட இரு தரப்பினருக்கிடையேயான மோதல், அதை அதிகரிப்பதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களே தவிர, சமாதானமடையும் வழியைப் பற்றி யோசிக்கவே இல்லை.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon