மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

நினைவு மண்டபத்தில் இரட்டை இலையா?

நினைவு மண்டபத்தில் இரட்டை இலையா?

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஊழலுக்கு மணி மகுடம் சூட்டுவதற்குச் சமம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான டெண்டர் முடிந்த நிலையில், நினைவு மண்டபம் கட்ட நேற்று (மே 7) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைய உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஊழலில் திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியைத் தமிழகத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து கவுரவப்படுத்துவது ஊழலுக்கு மணி மகுடம் சூட்டுவதற்கு ஒப்பானது ஆகும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“ஜெயலலிதா மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் பெங்களுர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் அடைக்கப்பட்டிருந்திருப்பார். இந்திய வரலாற்றில் எவரும் செலுத்தாத வகையில் ரூ.100 கோடி அபராதம் செலுத்தியிருந்திருப்பார். அப்படிப்பட்டவருக்கு ரூ.50 கோடியில் நினைவிடம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஊழல் சின்னமாகவே பொதுமக்கள் இதைப் பார்ப்பார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

“ஜெயலலிதாவின் நினைவிடம் நேராகப் பார்க்க பீனிக்ஸ் பறவை போன்றும், கழுகுப் பார்வையில் பார்க்க இரட்டை இலை சின்னம் போன்றும் காட்சியளிக்கிறது. ஏற்கெனவே எம்ஜிஆர் நினைவிடத்தின் வளாகத்தில் இரட்டை இலை சின்னம் வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. அதுகுறித்த சர்ச்சை எழுந்தபோது அது ‘குதிரை றெக்கை’யின் நிழல் என்று விஞ்ஞானபூர்வமான விளக்கம் அளித்து தமிழக அரசு தப்பித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாக இப்போது ஜெயலலிதா நினைவு மண்டபத்திலும் இரட்டை இலை திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊழல்வாதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதையும், அதில் இரட்டை இலையை அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். மேலும், “மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon