மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

நடிகைகள் மாற்றத்தை விரும்புகிறோம்!

நடிகைகள் மாற்றத்தை விரும்புகிறோம்!

‘கதாநாயகனை முழுமையாக நம்பியே பெண் கதாபாத்திரங்கள் இருப்பது போன்ற திரைக்கதையை நடிகைகள் விரும்புவதில்லை’ என்று நடிகை பாவனா கூறியுள்ளார்.

நீண்ட நாள் காதலரும் கன்னடப் படத் தயாரிப்பாளருமான நவீனை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் பாவனா. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் அவர், கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள தகரு படம் சமீபத்தில் வெளியானது. அதில் பாவனா பல் மருத்துவராக நடித்திருந்தார்.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். அதில், “மலையாள சினிமாவில் பெண்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியாகிறது. ஆனால் பாலிவுட் சினிமாவில் அப்படி இல்லை. அங்கு தீபிகா படுகோன், கங்கணா ரணாவத், அனுஷ்கா ஷர்மா, வித்யா பாலன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோருக்குச் சம வாய்ப்புகள் கிடைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கதாநாயகனை முழுமையாக நம்பியே பெண் கதாபாத்திரங்கள் இருப்பதுபோல் தொடர்ந்து படங்களில் திரைக்கதை அமைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகைகள் அதை விரும்புவதில்லை. ஏனென்றால் நடிகைகள் தற்போது மாறுபட்ட சிந்தனையில் இருக்கிறோம். மாற்றத்தை விரும்புகிறோம். அதனால் பாலிவுட் போன்று மலையாளத்திலும் பெண்களை மையமாகக்கொண்ட படங்கள் அதிகமாக வெளிவர வேண்டும். நானும் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதையே விரும்புகிறேன். ஆனால், இதுவரை அதுபோன்ற திரைக்கதை அமையவில்லை. திருமணத்துக்குப் பிறகும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது என் வாழ்க்கையில் ஒரு தடையாக இல்லை” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon