மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

மலேசியா: பிரதமர் பதவியை நஜீப் தக்கவைப்பாரா?

மலேசியா: பிரதமர் பதவியை நஜீப் தக்கவைப்பாரா?

மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில், பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது வழிகாட்டியான மகாதிர் முகமது தற்போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளார்.

பிரிட்டனிடமிருந்து 1957ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற பிறகு, மலேசியாவில் வெஸ்ட் மின்ஸ்டர் நாடாளுமன்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பரிசான் நேஷனல் கூட்டணியின் சார்பாக பிரதமர் பதவியை வகித்து வந்தார் நஜீப் ரசாக். மலேசிய அரசின் நிதியில் 680 மில்லியன் டாலர் மோசடி செய்ததாக, இவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதியன்று மலேசியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன்பின், மே 9ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது அந்நாட்டுத் தேர்தல் ஆணையம். இதை முன்னிட்டு, இத்தேர்தலைப் பார்வையிட பன்னாட்டுத் தேர்தல் ஆய்வாளர்கள் மலேசியாவுக்குச் சென்றுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆளும் பரிசான் நேஷனல் கூட்டணி மீது மக்கள் அதிருப்தியுடன் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நஜீபின் ஐக்கிய மலாய் தேசிய அமைப்புக்கட்சி வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், இக்கட்சி சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை தோல்வியைத் தழுவியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் கூட்டணியில் மலாய், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எதிர்க்கட்சியான மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் சார்பாகப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் மகாதிர் முகமது. இவர், 2003ஆம் ஆண்டு வரை ஆளும்கட்சியின் சார்பாகப் பிரதமர் பதவி வகித்தவர். நஜீப்பின் அரசியல் வழிகாட்டிகளில் ஒருவர். இவருக்கு 92 வயதாகிறது. தற்போது, நஜீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இவர் எதிர்க்கட்சிகளுடன் கைகோத்து தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.

70 இடங்கள் கொண்ட தேவன் நெகரா என்ற மேலவையின் உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள். தேவன் ரக்யத் என்றழைக்கப்படும் மலேசிய நாடாளுமன்ற கீழவையில், மொத்தமுள்ள 222 இடங்களில் 112 இடங்களைப் பெற்றால் மட்டுமே பெரும்பான்மை கிடைக்கும். 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நஜீப்பின் கூட்டணி 133 இடங்களைப் பெற்றது. தேர்தல் ஆணையம் எப்போதும் ஆளும்கட்சிக்குச் சாதகமாக இருந்துவருவதாகக் குற்றம்சாட்டி வருகின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் இதை மறுத்து வருகிறது. நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகமது இடையேயான போட்டியாக இந்தத் தேர்தல் உருவெடுத்துள்ளது.

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் சுமார் ஒன்றரை கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நள்ளிரவு முதல் மலேசியத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon