மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

தொழில் புரட்சியின் முக்கிய பொய்யுரையே – ‘மனிதனின் அறிவைக்கொண்டு என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்’ என்பதுதான். அதே அறிவு ஆணவமாகி, இயற்கையின் சக்தியைவிட என் அறிவு மேலானது எனும் எண்ணம் மனிதர்களை ஏகபோகத்துக்கு ஆட்டிப்படைக்கிறது. அதனால், தங்கள் சுயநலத்துக்காகவும், அறிவின் திமிரிலும் பல அழித்தொழிப்புகளை அறிவியல் என்ற பெயரில் பரப்பி வருகின்றனர். அதற்குப் பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம், நியூட்ரினோ ஆய்வகத்திற்கான ஏற்பாடுகளும் மலைகளைக் குடையும் தொழில்நுட்பமும்தான். இது நமக்குத் தெரிந்த திட்டம். நமக்குத் தெரியாத வேடிக்கையான ஒரு திட்டமும் இருக்கிறது.

அதுதான் மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டுவது. ஆம், தமிழகத்துக்கு வரும் தென்மேற்கு பருவ மழையைத் தடுப்பதே மேற்குத் தொடர்ச்சி மலை தானாம். இந்தியா முழுக்க தென்மேற்கு பருவ மழை பெய்தாலும் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லையாம். அதற்குக் காரணம் தென்மேற்கு பருவ மலைக்கான மேகங்களை மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பதனால்தான் என்பதுதான் ஹைலைட்.

இந்தக் காரணங்களுக்காக மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கின்றன. அதாவது, தென்மேற்கு பருவ மழைக்கான மேகங்களை இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் தடுத்து வைப்பதானால், கேரளாவுக்கே அதிக பயன் கிடைக்கிறது என்றும், மூன்றாயிரம் டி.எம்.சி தண்ணீர் தேவையில்லாமல் கடலில் கலந்து வீணாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக, ‘சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்’ மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பற்றிய செய்தி அறிந்த சூழலியல் ஆர்வலர்கள் பதறிப் போய் நிற்கின்றனர். பல்லுயிர் பெருக்கத்திற்கான ஆதாரமே மலைகள்தான். அதுவும் நீலகிரி மண்டலத்தின் பருவ நிலை என்பது உயிர்ச்சூழல் செழிக்க மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்டது. இது ‘உயிர்ச்சூழல் நிறை மண்டலம்’ என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி. இவற்றை மனித தேவைக்காக, பேராசைக்காக அறிவியல் என்ற பெயரில் அழிப்பது மூட நம்பிக்கைகளை விட ஆபத்தானது.

ஏற்கெனவே காடுகளையும் மலைகளையும் அழிப்பது, பழங்குடி மக்களை அப்புறப்படுத்துவது, தேயிலை தோட்டங்களுக்காக குளிர்மிகு சூழல் நிறைந்த உயிர் மண்டலங்களைச் சிதைப்பது என எண்ணிலடங்கா தீமைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இப்போது அறிவியல் என்ற பெயரிலும் அதுவே தொடர்கிறது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon