மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

சிறப்புக் கட்டுரை: எப்போதும் உடனிருக்கும் அச்சம்!

சிறப்புக் கட்டுரை: எப்போதும் உடனிருக்கும் அச்சம்!

அ. குமரேசன்

எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்பதே இன்றைய காலகட்டத்தின் யதார்த்தம்

தொழிற்சங்கம் என்பது ஏன் இன்றைக்குப் பலவீனமாகியிருக்கிறது? நியமிக்கவும் நிறுத்திவிடவும் (ஹயர் அண்ட் ஃபயர்) நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலெல்லாம் அரசாங்கம் தலையிடாது என்று உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. நிர்வாகங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றலாம் என்கிற நிலையில், தொழிலாளர்கள் எந்தச் சங்கத்தில் இணைவார்கள்? எப்படி வாக்களிப்பார்கள்? நிரந்தரத் தொழிலாளர் அல்ல என்பதால் அவர்களுக்கு வாக்களிக்கும் தகுதியே இருக்காது. போராட்டத்தின் வெற்றிக்கு அடிப்படையே பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டில்தான் இருக்கிறது. அந்த ஒருமைப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறிகிற ஏற்பாடுதான் ஒப்பந்த முறை.

ஆம், ஒப்பந்த முறை என்பது குறைந்த சம்பளத்தில் வேறு சட்டப் பாதுகாப்புகள் ஏதுமின்றி வேலை வாங்குவதற்கு மட்டுமல்ல, தொழிற்சங்கக் கொடிகளின் கீழ் திரளாமல் தடுப்பதற்காகவும்தான்.

இது ஏதோ பிரிட்டனில் மட்டும் நடப்பதல்ல. இங்கேயும் மத்திய அரசு இதற்கான சட்ட முன்வரைவைக் கொண்டுவந்திருக்கிறது. “நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கான பணி ஒப்பந்தம்” செய்துகொள்வதற்கு சட்டப்படி அளிக்கப்படும் அந்த அங்கீகாரத்தின் உட்பொருள், “ஹயர் அண்ட் ஃபயர்” அதிகாரம்தான். இது ஏதோ தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, இன்று அனைத்துத் தனியார் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஒப்பந்த முறையில், தொகுப்பூதிய அடிப்படையில்தான் நியமிக்கப்படுகிறார்கள். அந்த ஒப்பந்தத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பணி முறைப்படி அவர்கள் பேராசிரியர்கள்தான், விரிவுரையாளர்கள்தான். ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கிற ஊதியத்தில் கால்வாசிகூட அவர்களுக்குக் கிடைக்காது.

மனதுள் மிதக்கும் பயம்

இதற்கு நேர் மாறாக, எங்கும் பரவியிருக்கிற பன்னாட்டு, உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) நிறுவனங்களின் ஊழியர்களான மென்பொருள் வல்லுநர்களுக்கு ஒப்பீட்டளவில் நல்ல ஊதியம் தரப்படுகிறது. அவர்களை அழைத்துச் செல்லவும் கொண்டுவந்து விடவும் கார்கள் வந்துபோகின்றன. நாற்காலியில் செங்குத்தாக உட்கார்ந்துகொண்டு, மேசையில் உள்ள கணினியில் வேலை செய்ய வேண்டியதில்லை, குளுமையூட்டப்பட்ட, மெல்லிய இசை ஒலிக்கிற அரங்கில் போடப்பட்டுள்ள சோஃபாக்களில் சாய்ந்துகொண்டு, மடிக்கணினியில் வேலை செய்யலாம். உயரதிகாரிகள் வந்தால் எழுந்து நின்று பணிவோடு பதில் சொல்ல வேண்டியதில்லை. உட்கார்ந்தபடியே “ஹாய்” என்று விளித்து, நண்பர்களோடு உரையாடுவது போலப் பயமின்றிப் பேசலாம்.

ஆனாலும் தங்களைத் தொழிலாளிகள் என்ற பதத்தால் அடையாளப்படுத்துவதை விரும்பாத அளவுக்கு வார்க்கப்பட்டுள்ள மனநிலையோடு உள்ள அந்த வல்லுநர்களது மனக்குளத்தில் ஒரு பயம் மிதந்துகொண்டேதான் இருக்கிறது – எந்த நேரத்திலும் “ஃபயர்” செய்யப்படலாம் என்ற பயம்.

இவர்கள் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் என்பதும் எட்டு மணி நேரம் அல்ல. பனிரெண்டு மணி நேரம், பதினான்கு மணி நேரம் என்பதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. “நாங்கள் மனம் விரும்பியே பதினான்கு மணி நேரம் உழைக்கிறோம். அதற்கு எங்கள் உடலும் வலிமையாக இருக்கிறது, மூளையும் அதற்கேற்ற வலிமையோடு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கூடுதலாக சம்பாதிக்கிறோம். பிறகு எதற்காகப் பழைய எட்டு மணி நேர வேலை பற்றிப் பேச வேண்டும்” என்று அவர்களே கேட்கிற அளவுக்குச் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு பொது வாதமாகவும் வைக்கப்படுகிறது. இன்றைய தலைமுறைகளின் உழைப்புத் திறன் அதிகரித்திருக்கிறபோது, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதல் நேரம் பங்களிக்கும் ஆற்றல் பெருகியிருக்கிறபோது, எட்டு மணி நேர உழைப்பு என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனமான சிந்தனையாக, தொழிற்சங்கவாதிகள் தங்கள் பிழைப்புக்காகப் பேசுகிற கருத்தாகப் பதிய வைக்கப்படுகிறது. வாழ்வுக்கான எட்டு மணி நேரத்தை மறுப்பது, தொழிலாளர்கள் அல்லது வல்லுநர்கள் சங்கமாக இணைவதற்கும், சங்கமாக இணைந்து சிந்திப்பதற்கும், சங்கமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குமான நேரத்தை மறுப்பதே. இன்னும் சொல்லப்போனால், தங்களுடைய பிரச்சினைகளுக்காக மட்டுமல்லாமல், தாங்கள் வாழும் சமூகத்தின் பிரச்சினைகளுக்காகவும் தெருவுக்கு வருகிற பொது ஈடுபாட்டிற்கான நேரம் மறுக்கப்படுகிறது. சக மனிதர்களோடு உரசிக்கொண்டு நடப்பதன் மூலம் தனித் தீவுகளாகத் தனிமைப்பட்டுவிடாமல் கலந்து வாழ்கிற ஒரு கொண்டாட்ட மனநிலை மறுக்கப்படுகிறது.

கொண்டாட்டச் சூழல் பல நிறுவனங்களின் வளாகங்களுக்கு உள்ளேயே ஏற்படுத்தப்படுகிறது. மாதாமாதம் ஒரு விருந்து, நடனம் உள்ளிட்ட கேளிக்கைகள், உத்தரவாதமான ஃபாரின் சரக்காக குடிவகைகள் என்று நிர்வாகத்தின் செலவு பட்ஜெட்டில் இடம்பெறுகிறது என்றால் அது தொழிலாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்காக மட்டும்தானா? சங்கமாகச் சேர்ந்து இயங்காமல், சமூகத்தோடு கலந்துறவாடாமல், மனம் விசாலமடையாமல் வைத்துக்கொள்வதற்காகவும்தான். சிந்தனை ஆற்றலை மடிக்கணினித் திரைக்குள்ளேயே நிறுத்தி, நிறுவன வளாகத்திற்கு வெளியே போய்விடாமல் வைத்துக்கொள்வதற்காகவும்தான். முறைசாராத் துறையைச் சேர்ந்த ஏராளமான குறுந்தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிமட்டத் தொழிலாளர்களது நிலைமையைப் போன்றதுதான் “முறைசார்ந்த” இந்தப் பெரு நிறுவனங்களின் பணியாளர் நிலைமையும். வேறுபாடு, அந்த அதிகச் சம்பளமும் குளுகுளு கூடங்களும் கணினிகளும் ஆங்கில உரையாடல்களும்தான்.

நானும் நாங்களும்

சங்க உணர்வு எப்படி தடுக்கப்படுகிறது என்பதற்கு இதோ ஒரு அனுபவ சாட்சி: நண்பர் ஒருவரது மகன் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார். அவர் ஒருவித மனச்சோர்வுடன் காணப்படுவதாக நண்பர் சொல்லியிருந்தார். ஒரு விடுமுறை நாளில் அவர்களின் வீட்டிற்குச் சென்று, உணவுக்குப் பிறகு பேச்சோடு பேச்சாக விசாரித்தபோது, “நீங்களெல்லாம் நினைக்கிறது போல கம்பெனியில நாங்க வசதியா இல்லை. குடிக்கத் தண்ணி வேணும்னாக்கூட ரொம்ப தூரம் போகணும். ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தாக்கூட ஏன் சீட்ல இல்லைன்னு கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க. பெரிய கம்பெனி, ஆனா என் சீட்டை வந்து பாருங்க, எவ்வளவு அன்கம்ஃபர்ட்டபிளா இருக்குன்னு தெரிஞ்சிக்கிடுவீங்க. கொஞ்சம் ரிலாக்ஸ்டா ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தோம்னா கூப்பிட்டு விசாரிப்பாங்க, அப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா அட்வைஸ் பண்ணுறாங்க…” என்று சொல்லிக்கொண்டே போனார்.

“இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருக்குதுன்னு நிர்வாகத்தில் உரிய அதிகாரிகிட்ட சொல்லலாமே… அதெல்லாம் தயங்காமப் பேசலாம், அவங்க கேட்டுக்குவாங்க, ஆனால் பக்குவமாகப் பேச வேண்டும்…” என்று சொன்னேன். சில நாட்கள் கழித்து அவர் அதிக மனச்சோர்வுடனும் பதற்றத்தோடும் இருப்பதாக நண்பர் தெரிவித்தார். உடனே சென்று என்ன ஏது என்று விசாரித்தபோது மகன், “அங்கிள், நீங்க சொன்னபடிதான் மேனேஜ்மென்ட்கிட்ட அந்தப் பிரச்சினைகள் பத்திப் பேசினேன்… இப்ப எனக்கு மெமோ கொடுத்திருக்காங்க… ஏதாவது யூனியன் ஆரம்பிக்கப் போறியான்னு கேட்கிறாங்க…” என்றார்.

“நீ என்ன சொன்ன? எப்படிப் பேசுன?”

“எங்களுக்குப் போதுமான வசதி இல்லை, எங்க சீட் அன்கம்ஃபர்ட்டபிளா இருக்கு, தண்ணீர் குடிக்கிறதுக்குக்கூட நாங்க ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு, நாங்க ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தாக்கூட ஏன் சீட்ல இல்லைன்னு கேட்டு எங்களை டார்ச்சர் பண்ணுறாங்க, கொஞ்சம் ரிலாக்ஸ்டா ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தோம்னா எங்களை என்கொயர் பண்ணுறாங்க… இப்படித்தான் பேசினேன்.”

சட்டென எனக்கு விடை கிடைத்தது. நண்பரின் மகன் எனக்குப் போதுமான வசதி இல்லை, என் சீட் அன்கம்ஃபர்ட்டபிளா இருக்கிறது, தண்ணீர் குடிக்கக்கூட நான் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தாக்கூட ஏன் சீட்ல இல்லைன்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணுறாங்க, கொஞ்சம் ரிலாக்ஸ்டா ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தா என்னை என்கொயர் பண்ணுறாங்க…” என்று பேசியிருக்க வேண்டும்.

“நான்”, “எனக்கு” என்பதாகப் பேசாமல், “நாங்கள்”, “எங்களுக்கு” என்று பேசியதுதான் கோளாறு! “எனக்கு” என்று பேசியிருந்தால் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும். “எங்களுக்கு” என்று முன்வைக்கிறபோது அது மற்ற எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற சொல்லாகிறதே! அதிலே ஒரு கூட்டு உணர்வு அதாவது சங்க உணர்வு வெளிப்படுகிறதே! அதை எப்படி அனுமதிக்க முடியும்!

(பணியாளர்கள் இன்று எப்படி பிளாஸ்டிக் பொம்மைகளைப் போல ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் இன்றைய நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் எப்படி உறுதிசெய்வது என்பது பற்றியும் நாளை...)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected] .

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon