மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ஏற்காடு கோடைத் திருவிழா!

ஏற்காடு கோடைத் திருவிழா!

ஏற்காடு கோடைத் திருவிழாவில் அழகுத் தோட்டங்களைப் பராமரித்து வருபவர்களுக்கான போட்டி நடைபெறவுள்ளதாகத் தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் பிரபு நேற்று முன்தினம் (மே 6) அறிவித்துள்ளார்.

கோடைக்காலத்தை முன்னிட்டு ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கோடை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, 43ஆவது கோடை விழா மே 12ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெற உள்ளது. மலர்க் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

இதற்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் மேரி கோல்டு, ஃப்ரெஞ்ச் மேரி கோல்டு, ஜினியா, காஸ்மாஸ், கேலண்டுல்லா, சலிசம்,வின்கா, சால்வியா, பேன்சி, டேலியா, ப்ளாஸ்க், ஸ்பெத்திகுல்லம், வெர்பினா, ஜெரோனியம், பாலிசம், ஆந்தூரியம், கிரிசோந்தியம் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச் செடிகள் விதைக்கப்பட்டிருந்தன. மலர்க் காட்சியுடன் காய்கறி மற்றும் பழக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்க் காட்சி, ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப் போட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படகுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன. அதேபோல், கோடை விழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் பிரபு, “கோடை விழாவை முன்னிட்டு ஏற்காடு, சேலம் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அழகுத் தோட்டங்கள் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்காக வீட்டுத் தோட்டம், பங்களா தோட்டம், பள்ளிக் கல்லூரி தோட்டம், ஹோட்டல் தோட்டம், சிறப்புத் தோட்டம் ஆகியவை நடுவர் குழுவினரால் பார்வையிடப்படும். அதன்படி, இன்று (மே 8) சேலம் பகுதியிலுள்ள தோட்டங்களும், நாளை (மே 9) ஏற்காடு பகுதியிலுள்ள தோட்டங்களும் பார்வையிடப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு விழாவின் இறுதி நாளன்று பரிசுகள் வழங்கப்படும்”எனத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு கோடை விழா மே 27ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மட்டுமே நடத்தப்பட்டது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon