மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மோடி அரசின் தவறுகள்: மன்மோகனின் பட்டியல்!

மோடி அரசின் தவறுகள்: மன்மோகனின் பட்டியல்!

கர்நாடகத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் போன்றோர் பிரச்சாரம் செய்துவருகின்றனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரசாரம் செய்துவந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பரப்புரையை நேற்று (மே 7) தொடங்கியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “நண்பர்களே, நமது தேசம் கடுமையான சூழ்நிலையில் தற்போது சிக்கியுள்ளது. விவசாயிகள் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நமது பொருளாதாரம் குறைந்த அளவே வளர்ச்சியடைந்துவருகிறது. இவை அனைத்தையும் தடுத்திருக்கலாம்.

பொருளாதாரக் கொள்கைகள் என்பது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மோடி அரசின் நோக்கங்கள் நன்மையை நோக்கியது என்று கூறப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. பகுப்பாய்வு மற்றும் தர்க்க அறிவு போன்றவைகள் அவற்றில் இல்லை. சர்வதேச அளவில் கொந்தளிப்பான சூழல் இருந்தபோதும் ஜனநாயன முற்போக்கு கூட்டணி அரசு ஆண்டுக்கு 7.8 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியை அளித்தது. ஆனால் தற்போதைய அரசோ சர்வதேச சூழல் சாதகமாக இருந்தும் குறைந்த அளவிலேயே வளர்ச்சி சதவிகிதத்தை அளித்துவருகிறது.

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பழிப்பு ஆகியவற்றை மோடி அரசு தவிர்த்திருக்கலாம். இந்த நடவடிக்கைகளால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. நாட்டின் ஜிடிபிக்கு பங்காற்றும் ஏற்றுமதியும் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை உலக அளவில் கடுமையாகக் குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயரத்துக்குச் சென்றுள்ளது. காரணம் மோடி அரசு கலால் வரியை அதிகமாக விதிக்கிறது. மோடி அரசு மக்களைத் தண்டிக்கிறது. வளமான பொருளாதாரத்துக்கு நல்ல முறையில் செயல்படும் வங்கித் துறை மிக அவசியம். தற்போது நமது பொருளாதாரத்தின் வளர்ச்சி எந்திரங்கள் தெளிவின்றி உள்ளன. மோடி அரசின் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு வங்கித் துறை மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது. சமீப நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றைத் தடுத்திருக்கலாம். தீர்வுக்கான நடவடிக்கையை எடுக்காமல், பிரச்சினைகளுக்கு சாக்குப்போக்கு கூறிவருகிறது.

கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி அதிகரித்துள்ளன. ஆனால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் 2.41 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. ஆனால் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனங்கள் எங்கே?

பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தினோம். ஆனால் அவை தற்போது சீர்குலைக்கப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார தோய்வுக்குக் காரணம் கேட்டால், 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை மோடி விமர்சிக்கிறார். பசுமைப் புரட்சி, பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவற்றின் பங்கை அவர் மறந்துவிட்டார்.

2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தனது உறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார். உண்மையான தலைமை என்பது வாய்ப்புகளை உருவாக்கும். அழிக்காது. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் சரி செய்யவில்லை என்றால் பேரழிவுக்கு இது வழிவகுத்துவிடும்.

பெங்களூரு மற்றும் கர்நாடகா இந்தியாவுக்கு வழிவகுத்துள்ளது. ஆட்சியில் மீதமிருக்கும் கொஞ்ச காலத்திலாவது பிரதமர் மோடி இவற்றிலிருந்து பாடம் படித்து சிலவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon