மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

பஞ்சாப் வங்கியைச் சுரண்டும் கடனாளிகள்!

பஞ்சாப் வங்கியைச் சுரண்டும் கடனாளிகள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெரும் கடனாளிகள் மொத்தம் ரூ.15,171.91 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிதி மோசடிகளைச் சந்தித்து வருகிறது. அதனிடம் கடன் பெற்ற கடனாளிகள் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து வருவதும் அதிகரித்துள்ளது. கடனை வசூலிக்கும் நடவடிக்கையாக அவ்வங்கி சென்ற ஜூன் மாதத்திலிருந்தே பெரும் கடனாளிகளின் பெயர்களை பொதுப்படையாக வெளியிட்டு வருகிறது. அம்மாதம் ரூ.11,879 கோடியாக இருந்த கடன் மதிப்பு 28 சதவிகித உயர்வுடன் தற்போது ரூ.15,171.91 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறாக கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும் அதைத் திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்களின் பெயரை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக குடோஸ் கெமி லிமிடெட் நிறுவனம் ரூ.1,301.82 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து வின்சம் டயமண்ட்ஸ் & ஜூவல்லரி நிறுவனம் ரூ.899.70 கோடியும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.579.44 கோடியும், ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.410.18 கோடியும், வி.எம்.சி. சிஸ்டம்ஸ் லிமிடெட் ரூ.296.08 கோடியும், அர்விந்த் ரெமிடீஸ் நிறுவனம் ரூ.158.16 கோடியும், இந்து பிராஜெக்ட்ஸ் லிமிடெட் ரூ.102.83 கோடியும் கடன் பாக்கி வைத்துள்ளன.

அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக் கடன் அளவு ரூ.57,519.41 கோடியாக உயர்ந்திருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் வாராக் கடன் அளவு ரூ.55,370.45 கோடியாக இருந்தது. இதுபோன்ற வாராக் கடன் பிரச்சினைகளில் தவித்து வரும் இவ்வங்கி சமீபத்தில் நீரவ் மோடி செய்த ரூ.13,700 கோடி மோசடியால் மிகவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon