மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மே 2018

இருட்டு அறையில்: வலுக்கும் எதிர்ப்பு!

இருட்டு அறையில்: வலுக்கும் எதிர்ப்பு!

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரை இழிவுபடுத்தியுள்ளதாக திருநங்கை அப்சரா ரெட்டி சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வசூல் அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், திரையுலகினர் உள்பட பலர் இந்தப் படத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குடும்பத்துடன் பார்க்க முடியாத, ஆபாசமான படம்; இது போன்ற படங்களை அனுமதிக்கக் கூடாது என இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சதீஷ்குமார் உள்பட திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் திருநங்கை அப்சரா ரெட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதாகக் கூறி, சென்னை காவல் ஆணையரிடம் இன்று (மே 8) புகார் அளித்துள்ளார். இது குறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "மாற்றுப் பாலினத்தோர், ஓரினச் சேர்க்கையாளர்கள் எல்லாருமே நிஜ முகத்துடன் வெளி உலகத்திற்கு வருவதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். அதே மாதிரி சினிமா என்பது மிகப் பெரிய தளம். இங்கு சொல்லப்படும் கருத்துகள் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை மிகவும் தரக்குறைவாகக் காண்பித்துள்ளனர். கெளதம் கார்த்திக் ஒரு பெரிய நடிகரின் மகன். அவர் ஏன் இது போன்ற படங்களைத் தேர்வு செய்கிறார்? இயக்குநர் சந்தோஷ் இந்தப் படத்தின் மூலம் உலகிற்கு என்ன சொல்லவருகிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் புகார் அளிக்க இருந்தோம். இது குறித்து விஷாலைத் தொடர்புகொண்டு பேசியபோது கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன் என்று கூறினார். ஆனால் திடீரென்று வர இயலவில்லை என்று கூறிவிட்டார். ஒருவேளை கெளதம் கார்த்திக் பெரிய இடத்து பையன் என்பதாலா என்று தெரியவில்லை. ஆனாலும் கெளதம் கார்த்திக்கும் சந்தோஷும் மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தணிக்கைக் குழுவில் பாலினச் சிறுபான்மையினரும் இடம்பெற வேண்டும் என்று 'ஐ' திரைப்படம் வெளிவந்ததிலிருந்தே நாங்கள் கேட்டுவருகிறோம். ஏனென்றால் இது போன்ற படங்களை வெளியிடும்போது, அது எங்கள் இனத்தை பாதிக்குமா என்று நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், ''அந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்தபோதே இந்தப் படம் ஓடக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனக்கே கஷ்டமாக இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எனக்கே இந்தப் படம் ஓடக் கூடாது என்று தோன்றுவது எவ்வளவு கேவலமான விஷயம். முன்னோட்டக் காட்சி ஏதோ போகிற போக்கில் பண்ணியதில்லை. ஒற்றை வார்த்தையை மையமாகக் கொண்டுதான் முன்னோட்டக் காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். மிகத் தெளிவாக தாங்கள் செய்வது இன்னதென்று தெரிந்து செய்திருக்கிறார்கள். அந்த தைரியம் பயத்தைக் கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.

"யாரோ முன்ன பின்னே தெரியாத ஒருத்தர் பண்ணியிருந்தால் கூட பரவாயில்லை. மிகவும் மதிக்கக்கூடிய சினிமா துறையில் முக்கியமான ஒருவர் இப்படத்தைத் தயாரித்திருப்பதால் அது மற்றவர்களுக்குத் தவறான முன் உதாரணம் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் 'ஏ' படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை.ஆனால், இந்தப் படம் ஓடக் கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், இப்படிப் படமெடுத்தால்தான் ஓடும் என்று நினைத்து சிலர் படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்'' என்று பேசியுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

செவ்வாய் 8 மே 2018