மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை: ஜெயக்குமார்

போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை: ஜெயக்குமார்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் இறக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய மாற்றத் தொகையை வழங்கவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். இன்று (மே 8) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நேற்று முதல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஒடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தாமல், அடக்குமுறை மூலம் போலீஸ் ராஜ் நடத்தித் தீர்வு காண அரசு முயல்வதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து, அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில், சாலை மறியலில் அரசு ஊழியர்கள், குறிப்பாகப் பெண் அரசு ஊழியர்கள் எல்லாம் இறங்கியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் குண்டுக்கட்டாகக் கைது செய்வதும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன்பே சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும், நள்ளிரவில் அநாகரிகமாக வீடு புகுந்தும், ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகளைக் கைது செய்வது பண்பாடற்ற, ஜனநாயக விரோதச் செயல்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தை, காவல் துறையை வைத்துக்கொண்டு துப்பாக்கியையும், தடியையும் காட்டிக் கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று முதல்வர் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்.

அடாவடி மற்றும் அராஜக நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற போராட்ட உணர்வுகளை அடக்கிவிட முடியும் என்ற தவறான மனநிலையில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலில் விடுபட வேண்டும்.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் அனைவரின் பிரச்சினைகளுக்கும் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்து நேரடியாக அவரே பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலைக்குள் நல்ல தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் போது ஆட்சியாளர்களின் கண்ணுக்கு தெரியாத நிதிப் பற்றாக்குறை இப்போதுதான் தெரிகிறது போலும். தங்களுக்கு ஒரு நீதி... அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நீதி என்பது போல அரசு செயல்படுவதை ஏற்க முடியாது.

அரசு ஊழியர்களின் போராட்டம் இனியும் தொடரக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவிதினகரன்:

போராட்டச் சங்கங்களின் தலைவர்களையும், ஜாக்டோ ஜியோ அமைப்பினைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை நேற்றே முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பேரில் பேருந்து நிலையங்களிலும், சுங்கச்சாவடிகளிலும் கைது செய்தது அநாகரீகமானச் செயல்.

அனைத்துப் பத்திரிகைகளிலும் அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள் செய்தியினையும் வெளியிட்டு, இப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயன்றுள்ளது பழனிசாமியின் அரசு. நியாயமான அவர்களின் போராட்டத்தை அடக்குமுறையை ஏவி, அரசு முடக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம். கைது நடவடிக்கைகளைக் கைவிட்டு, உடனடியாக பழனிசாமியின் அரசு இவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும்.

போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை

இந்நிலையில், போராட்டத்தின்போது தஞ்சை பாபநாசம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய தியாகராஜன் என்பவர் மரணமடைந்ததாகத் தகவல் பரவியது. மின்னம்பலத்தின் மதியப் பதிப்பிலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தத் தகவலை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசாங்கத்தின் கஷ்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி 14,000 கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 கமிட்டிகள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு 100 ரூபாய் வருவாய் என்றால், அதில் 70 ரூபாய் அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது. இதனைப் புரிந்துகொண்டு போராட்டக்காரர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை. அந்த ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்கவேயில்லை. இதய நோய் காரணமாக நேற்று காலையிலேயே அவர் தஞ்சையில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் இறந்துள்ளார். எனவே, தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்.

ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon