மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

அஞ்சி ஒதுங்கும் தமிழகம் : சிதம்பரம்

அஞ்சி ஒதுங்கும் தமிழகம் : சிதம்பரம்

பதினைந்தாவது நிதி கமிஷன் நியமனம் மற்றும் அது உருவாக்கிய விதிமுறைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நியமித்த பதினைந்தாவது நிதி கமிஷன், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து, ஏப்ரல் 10ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் தென்னிந்திய மாநில நிதியமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று (மே 7) அமராவதியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தேசிய அளவிலான நிதியமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் 15வது நிதிக்குழுவின் விதிமுறைகள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளை நீர்க்கச் செய்யும் விதமாக உள்ளது என இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் மற்றும் தெலங்கானா மாநில நிதியமைச்சர்கள், இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.

ஆறு மாநில நிதியமைச்சர்களின் எதிர்ப்பினைத் தான் வரவேற்பதாக, இன்று (மே 8) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். பதினைந்தாவது நிதி கமிஷன் விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணானவை என்றும், இதனை எதிர்க்கும் நடவடிக்கையில் இருந்து தமிழகம் அஞ்சி ஒதுங்கியிருப்பதைக் கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை நேரில் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது, கடந்த காலங்களில் சிறந்த முறையில் செயலாற்றிய மற்றும் வளர்ச்சியடைந்த தென்னக மாநிலங்களுக்கு எதிராக, 15வது நிதி கமிஷன் விதிமுறைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

”15வது நிதி கமிஷனின் விதிமுறைகளைப் பின்பற்றினால், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குக் கிடைக்கும் வருவாயின் பங்கு மேலும் குறையும். வருவாய் பற்றாக்குறை மானியம் நிறுத்தப்படும். மாநிலங்கள் தானாக சமூக மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவது மறுக்கப்படும். பண மதிப்பழிப்பு மற்றும் அவசரமாகச் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி குறைகளுக்குப் பிறகு, கடுமையான சேத்த்தை உருவாக்கும் நடவடிக்கையே 15வது நிதி கமிஷன் வரையறுத்துள்ள விதிமுறைகள்” என்று ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon