மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

முன்னாள் முதல்வர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசு பங்களாவில் வசிக்க வகை செய்யும் உத்தரப் பிரதேச அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

முதல்வர் பதவிக்காலம் முடிந்த 15 நாள்களுக்குள் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று 1981ஆம் ஆண்டு அன்றைய உத்தரப் பிரதேச முதல்வர் வி.பி.சிங் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தை உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடந்த 2016ஆம் ஆண்டு, பதவிக்காலம் முடிந்த பிறகும் முதல்வர்களை அரசு பங்களாவில் வசிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்.

அகிலேஷ் யாதவ் கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களான ராஜ்நாத் சிங், கல்யாண்சிங், முலாயம்சிங் யாதவ், மாயாவதி, என்.டி.திவாரி ஆகியோர் அரசு பங்களாக்களில் வசித்துவந்தனர். இதை எதிர்த்து லோக் பிரஹாரி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் நேற்று (மே 7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில், முன்னாள் முதல்வர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னர் அரசு பங்களாவில் வசிப்பதற்கு உரிமையில்லை என்று கூறிய நீதிபதி ரஞ்சன் கோகாய், முன்னாள் முதல்வர்கள் நிரந்தரமாக அரசு பங்களாவில் வசிக்க வகை செய்யும்விதமாக உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், “சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறுக்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்காலம் முடிந்த பிறகு அவருக்குப் பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் சட்டத்தின் முன் அவர் சாதாரண குடிமகன்தான். பதவிக்காலம் முடிந்த பிறகும் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் வசிக்கலாம் என்பது அரசியல் சட்டத்தின் சமத்துவ கோட்பாட்டுக்கு உகந்ததல்ல” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், அரசு பங்களாவில் வசிக்கும் முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி உள்ளிட்ட ஆறு முன்னாள் முதல்வர்கள் பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது