மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

ஆபாச குறுஞ்செய்தி: பேராசிரியரைத் தாக்கிய மாணவி!

ஆபாச குறுஞ்செய்தி: பேராசிரியரைத் தாக்கிய மாணவி!வெற்றிநடை போடும் தமிழகம்

பஞ்சாப் மாநிலத்தில் தவறாக குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை மாணவி ஒருவர் தனது தாயாருடன் கல்லூரி வளாகத்திலேயே தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் சாமன் லால் தன்னிடம் பயிலும் மாணவிக்கு இரட்டை அர்த்தத்தில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, கல்லூரி முதல்வரிடம் வெள்ளிக்கிழமை (மே 4)புகார் அளித்தார். பேராசிரியரைக் கல்லூரி முதல்வர் எச்சரித்தார். பேராசிரியர் மாணவியிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, மாணவி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அன்றிரவு மாணவியை செல்பேசியில் தொடர்புகொண்ட பேராசிரியர், ஓடிப் போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், உன் பெற்றோருக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் எனவும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் நேற்று முன் தினம் (மே 5) கல்லூரிக்குச் சென்று பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் கல்லூரி வளாகத்திலேயே மாணவியும் அவரது தாயாரும் இணைந்து பேராசிரியரைத் தாக்கியுள்ளனர். பின்னர், அவரை கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றனர். மாணவி தன் தாயாருடன் பேராசிரியரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமன் லால் குடித்துவிட்டு போதையில் பாடம் நடத்துவதாகவும், அக மதிப்பீடு குறித்துப் பேசவேண்டும் என இரவு நேரங்களில் அழைப்பதாகவும் கல்லூரி முதல்வரிடம் பல மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கல்லூரி முதல்வர் சிரஞ்சீவி கவுர் , "மாணவிகளிடம் தவறாகப் பேசிய பேராசிரியர் சாமன் லால் குறித்து மாநில கல்விச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். பேராசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் அல்லது கல்லூரியில் இருந்து நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார் " எனத் தெரிவித்துள்ளார்.

சாமான் லாலை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, ​​அவரது மனைவி, "அவர் மது அருந்தியதால், அந்தப் பெண்ணை தவறாக அழைத்துள்ளார். அது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மாணவி அவரை நடத்திய விதம் சரியானது அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon