மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

ஆன்மிக அரசியலில் நுழைந்த பணப்பெட்டி!

ஆன்மிக அரசியலில் நுழைந்த பணப்பெட்டி!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 65

இராமானுஜம்

தமிழ் சினிமா வியாபாரத்தில் எம் ஜி. ஆர்., சிவாஜிக்குப் பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் ஆதிக்கம் செலுத்தினார்கள். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் பூஜை அன்றே வியாபாரம் ஆகிவிடும். கமல் நடிக்கும் படங்கள் மதில் மேல் பூனையாகவே இன்று வரை இருந்துவருகின்றன.

படையப்பாவின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் சம்பளம் என்ன என்பதைத் தீர்மானிக்க முடியாத குழப்பம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் நிலவியது. வருடத்திற்கு மூன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து வந்த ரஜினி 1995க்குப் பின் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என மாறியதால், ரஜினி படம் எப்போது வரும் என்ற ஏக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. தியேட்டர்கள் மத்தியில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ரஜினி நடிக்கும் படம் வருவதால் கடும் போட்டியும், விலை ஏற்றமும் ஏற்பட்டது. இதுவே ரஜினியின் பலம்.

படையப்பா வெற்றிக்கு பின் நடித்தது போதும் என்ற மனநிலையில் ரஜினி இருந்ததாகக் கூறப்பட்டது. ஆன்மிக விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிய ரஜினியின் அசைவுகள் தமிழக அரசியல் கட்சிகளால் கவனிக்கப்பட்டுவந்தன. சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரஜினியைப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தும் வேலைக்கு, ரஜினியின் தரப்பு தகவல்களைத் தொடர்ந்து கொடுத்துவந்தது.

ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தனர். அதற்குத் தொடர்ந்து மெளனம் காத்து வந்த ரஜினிகாந்த் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சித் தலைமையும் சமமாகவே நெருக்கம் காட்டிவந்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் ரஜினியைக் குழப்பவாதியாகவே பார்த்து விமர்சனம் செய்துவந்தன. ஆனால் அவர் தெளிவாக, காரியத்தில் வீரியமாக இருப்பதை அவரது செயல்பாடுகள் தமிழக மக்களுக்கு உணர்த்தி வருகின்றன. திமுக , அதிமுக கட்சிகள் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சினிமாவை ஆயுதமாக, பிரச்சார சாதனமாகப் பயன்படுத்தியது. கதாநாயகனாக நடிக்கும் படங்களை அதிக விலைக்கு விற்கவும், தடையின்றி தியேட்டர்களில் ஓட வைக்கவும் அரசியலைப் பயன்படுத்திய ஒரே நடிகர் ரஜினிகாந்த். படையப்பா படத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக பஞ்ச் வசனங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். படமும் படு வேகமாக விற்பனையாகி ‘நீலாம்பரி’ பரபரப்பினால் சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பிறகு அரசியலுக்கு வருவார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தன்னுடன் இருக்கும் நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக பாபா படத்தைத் தொடங்குவதாக அறிவித்தார் ரஜினிகாந்த். பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ. துரை நிர்வாகத் தயாரிப்பாளராக அறிவிக்கப்பட்டார். கதை, திரைக்கதை, தயாரிப்பு ரஜினிகாந்த். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா எனக் கோடம்பாக்கம் பரபரப்பானது. அரசியல் களம் எந்த முடிவுக்கும் வர முடியாது தவித்தது.

பாபா கதை விவாதம் நடந்த அருணாச்சலா கெஸ்ட் ஹவுஸுக்குத் தன்னை சந்திக்க வந்த நபர்களிடம் குழந்தையின் ஆர்வத்துடன் பாபா படத்தின் கதையைக் கூறிக் கருத்து கேட்டார் ரஜினி. தங்களிடம் கருத்து கேட்பதே மிகப் பெரிய கௌரவம் என நினைத்தவர்கள் சூப்பர் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார்கள். யாராவது வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தால் சுரேஷ் கிருஷ்ணா நல்லதொரு ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கக்கூடும்.

பாபா படத்தைத் தயாரிப்பதன் மூலம் தான் நடிக்கும் படங்களின் வியாபாரம், தனக்கு என்ன சம்பளம் நிர்ணயிக்கலாம் ஆகியவற்றை அறிந்துகொள்ள ரஜினி முயற்சித்தார்.

தன்னை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள், அரசியல் கட்சிகளுக்குத் தான் எந்த மாதிரியான அரசியலை விரும்புகிறேன் என்பதை பாபா படத்தின் மூலம் உணர்த்த முயற்சித்தார். தமிழக அரசியல், சினிமா மீது பற்றில்லாத தன்மையுடன் இருப்பதாகத் தன் கதாபாத்திரத்தின் மூலம் தன் திரைக்கதையால் உணர்த்திய ரஜினி நீங்கள் அழைப்பதால் வருகிறேன் என்பதைச் சொல்லியிருந்தார்.

தமிழக அரசியல் ஊழலில் ஊறிப்போய், அதிகார அத்துமீறல், குடும்ப நலன் சார்ந்து இருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்த ரஜினி பதவியைத் தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையும் சொல்லத் தவறவில்லை. ரஜினி நல்லவரா, கெட்டவரா என்பதைக் கடந்து ஆன்மிகம் நிரம்பிய அரசியல், அப்பழுக்கற்ற, சுயநலமற்ற ஆட்சித் தலைமையை விரும்பியதை பாபா படத்தின் மூலம் வெளியுலகுக்குத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

சுயநலத்துடன் பணத்தாசை கொண்டு செயல்படக் கூடாது எனத் திரைப்படத்தில் சொன்ன நியாயங்களைத் தனது குடும்பத்திலேயே அமல்படுத்த முடியாது என்பதை பாபா திரைக்கதை எழுதியபோது ரஜினி உணர்ந்திருக்க மாட்டார்.

பாபா திரைப்பட அறிவிப்புக்குப் பின் அந்தப் படத்தை முன்வைத்து லதா ரஜினிகாந்த் ஊடகங்களில் வெளியிட்ட விளம்பரம் ரஜினி ரசிகர்களை ஆவேசப்பட வைத்தது. பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது. அரசியல் கட்சிகள், ‘ரஜினிகாந்த் இமேஜ் பாபா படத்திற்கு பின் படு குழியில்; நமக்குத் தொந்தரவு இல்லை’ எனப் பரவசமடைந்தன.

ரஜினிகாந்த் கால் நூற்றாண்டு காலமாக கட்டிக் காப்பற்றி வந்த இமேஜ் டேமேஜ் ஆனது. பாபா பனியன், கீ-செயின், கேசட், ஸ்டிக்கர் என ரஜினியைக் கூறுபோட்டு வியாபாரத்தை பிளாட்பாரத்தில் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்.

பணத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு லதா ரஜினிகாந்த் தொடங்கிய வியாபாரம் ரஜினியைப் படுகுழியில் தள்ளியதும், அதனை வழிமொழியும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய படப்பெட்டி வேட்டையும் நாளை 1 மணிக்கு.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon