மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக ஆந்திர அரசு பேரணி!

பாலியல் வன்முறைகளுக்கு  எதிராக ஆந்திர அரசு பேரணி!வெற்றிநடை போடும் தமிழகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆந்திர அரசு சார்பாக ‘பெண்களின் பாதுகாப்புக்காக ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுமி ஒருவர் 55 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு அதுவே கடைசி நாளாக இருக்க வேண்டும்.இதுபோன்ற குற்றங்களை நாம் உறுதியான முறையில் கையாள வேண்டும். சாலையில் செல்லும் போது பெண்கள் இதுபோன்றவர்களை பார்த்தால் அவர்கள் முகத்தில் எச்சில் துப்பவேண்டும். அதே சமயம் அருகில் உள்ள பொதுமக்களிடம் இது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்” என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்பட்டும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆந்திர அரசு சார்பாக இன்று (மே 7) பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. “பெண்களின் பாதுகாப்புக்காக ஒன்றிணைவோம்” என்ற தலைப்பிலான பேரணியில் ஆந்திரா முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவிலுள்ள தும்மலப்பள்ளி கல்லூரி அருகே பங்கேற்றார்.

முன்னதாக, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கடந்த 3 ஆம் தேதியே தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon