மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 மே 2018

ரஜினி எனும் மாயமான் உருவான விதம்!

ரஜினி எனும் மாயமான் உருவான விதம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 64

இராமானுஜம்

ரஜினி நடிப்பில் 1999க்குப் பின் வெளியான அனைத்துப் படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம்.

பாபா (2002), சந்திரமுகி (2005), சிவாஜி (2007), குசேலன் (2008), எந்திரன் (2010), கோச்சடையான் (2010), லிங்கா (2014), கபாலி (2016) கடந்த 16 வருடங்களில் எட்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இதில் கோச்சடையான் அனிமேஷன் படம் என்றாலும் ரஜினியை முன்வைத்து வியாபாரம் செய்யப்பட்ட படம். இதில் எந்தப் படமும் லாபகரமான படம் இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு திரைப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என அனைத்துத் தரப்பினருக்கும் அசல் வசூல் ஆகி, கூடுதல் வருவாய் கிடைத்திருந்தால் அது லாபகரமான படம்.

சினிமாவைப் பொறுத்தவரை மொத்த வசூலையும், தயாரிப்பாளர் விற்பனை செய்த தொகையை மட்டும் கணக்கில்கொண்டு இங்கு பெருமை பேசப்படுகிறது. இக்கட்டுரை அது போன்று நுனிப்புல் மேயும் வகையில் எழுதப்படவில்லை. கடைகோடி டூரிங் தியேட்டர் வசூலும் கணக்கில் கொண்டு எழுதப்படுகிறது.

‘சந்திரமுகி’ முதல் மூன்று நாள்களும் சுமாராக ஓடி நான்காம் நாள் கல்லா கட்டிய படம். அதுவும் நஷ்டத்தை ஏற்படுத்தியதா எனக் கேட்பவர்களுக்கு ஆச்சர்யமான தகவல் காத்திருக்கிறது.

மினிமம் கேரண்டி அடிப்படையில் படத்தைத் திரையிட்டவர்களுக்குக் கொடுத்த தொகை மட்டும் வசூல் ஆனது. தியேட்டர் வாடகை அல்லது 70% X 30% அடிப்படையில் திரையரங்குக்குக் கிடைக்க வேண்டிய பங்குத் தொகை பெரும்பான்மையான தியேட்டர்களுக்குக் கிடைக்கவில்லை.

சிவாஜி படம் தயாரித்த ஏவி.எம் நிறுவனத்துக்கு நஷ்டம் என்பதை நாகரிகம் கருதி அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.

தமிழ் சினிமா காலமாற்றத்துக்கேற்ப, தொழில்நுட்ப மாறுதலுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. தன்னை நம்பி வந்த எவரையும் தமிழ் சினிமா ஏமாற்றவில்லை. தவறான புரிதல், பேராசையுடன் சினிமாவுக்குள் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு காலம் வழங்கிய கற்பகவிருட்சங்களாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இருந்துள்ளனர். தயாரிப்பாளர்களை தங்களின் முதலாளிகளாக மதித்த நடிகர்களுக்குப் பின்னால் நடிக்க வந்த நடிகர்கள், தங்களை வைத்து முதலீடு செய்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களை மதிப்பதும் இல்லை; நேரடித் தொடர்பில் இருப்பதும் கிடையாது.

அதனால்தான் காலம் கடந்தும் எம்ஜிஆர், சிவாஜி, விஐயகாந்த் பேசப்படுகிறார்கள். தயாரிப்பாளர்களின் சிரமத்தைத் தங்கள் தோள்களில் சுமந்திருக்கிறார்கள். இதுபோன்ற நிலையை ரஜினிகாந்த் சில சமயங்களில் கடைப்பிடித்தது உண்டு. தன்னை வைத்து படம் எடுத்தவர்கள் தொழில் ரீதியாகக் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு உதவ அவராகவே முன்வந்து படம் நடித்துக்கொடுத்தார். தன் வளர்ச்சிக்குப் பலமான அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த கவிதாலயா நிறுவனத்துக்கு அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொடுத்தார். அஸ்திவாரத்தைப் பலப்படுத்திக் கொடுத்த பஞ்சு அருணாசலம் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது அருணாசலம் படத்தின் வட ஆற்காடு உரிமையை அவருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தார். தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் உதவியாளர்களுக்கு உதவி செய்ய பாண்டியன், சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்துக்கு சந்திரமுகி, ஏவி.எம் நிறுவனத்துக்குச் சிவாஜி எனப் படங்கள் நடித்துக் கொடுத்த பெருந்தன்மைக்காரர் ரஜினிகாந்த் என்பதை மறுக்க முடியாது.

கோவை ராயல் தியேட்டரில் 100 நாட்கள் மன்னன் படத்தின் நிகர வசூல் ரூபாய் 9,91,887.65 பைசா. இந்த தியேட்டரில் 67 காலைக்காட்சி, 100 பகல் காட்சி, 100 மாலை காட்சி, 67 இரவுக் காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருக்கிறது. 100 நாட்கள் நிகர வசூல் சுமார் 10 லட்சம் என்பது இன்றைக்கு ஒரு தியேட்டரின் ஒருநாள் மொத்த வசூலாக மாறியிருக்கிறது. மன்னன் வெளியான காலங்களில் சென்னை சத்யம் தியேட்டரின் ஒரு காட்சி நிகர வசூல் ரூபாய் 5,042.40 பைசா. இது இரண்டு குடும்பங்கள் சத்யம் தியேட்டரில் படம் பார்க்க இப்போது செல்பவர்களுக்கு ஆகும் செலவு. கபாலி படத்தின் தொடக்கக்காட்சி டிக்கெட் விலை 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளியான படங்களை 1999 வரை தயாரித்தவர்கள், விநியோக உரிமை வாங்கியவர்கள், திரையிட்ட திரையரங்குகள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த் சம்பளத்தை இன்றைய ஹீரோக்களை போன்று அதிரடியாக உயர்த்தவில்லை. சம்பளம் அதிகம் தருவதாக கூறினாலும் மறுத்துவிட்டுத் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்களின் தகுதிக்கு முக்கியத்துவமளித்து படங்களைத் தேர்வு செய்தார். ஆனால், 1999க்குப் பின்னர் தனக்கான சம்பளத்தில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்காக எந்தச் சமரசத்துக்கும் தயாரானார் ரஜினி. சுய பரிசோதனை செய்து கொள்ள அவர் எடுத்தது பாபா; ஆன்மிகப் படம்.

ரஜினியின் சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்த பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு ரஜினிகாந்த். தமிழிலும், தெலுங்கிலும் ரஜினிகாந்த் உச்சத்தைத் தொட காரணமாக இருந்த படையப்பா படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பின் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் ரஜினி நடித்த பாபா படம் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இருக்கிறது. பாபா படத்தை வைத்து லதா ரஜினிகாந்த் ஆடிய பகடை ஆட்டம் பாபா படத்தைத் திரையிட்ட தியேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்ல; ரஜினிகாந்த் என்கிற நடிகரின் புகழையும், சினிமா வியாபாரத்தையும் படுகுழிக்குள் தள்ளியது. என்னவெல்லாம் நடந்தது, நாளை பகல் 1 மணிக்கு.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

ஞாயிறு 6 மே 2018