மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

கொல்ல முயன்ற காதலனுடன் வாழ்க்கையா?

கொல்ல முயன்ற காதலனுடன் வாழ்க்கையா?வெற்றிநடை போடும் தமிழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக் கலை படித்துவரும் மாணவி லாவண்யாவைக் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பல்கலைக்கழக விடுதி வாயிலில் அவரது காதலன் நவீன் குமார் கழுத்தை அறுத்தார். இதில் காயமடைந்த மாணவி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விஷமருந்தித் தற்கொலைக்கு முயன்ற நிலையில் நவீன் குமார் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மாணவியின் வாக்குமூலத்தைஇன்று காலை 7மணிப் பதிப்பில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக லாவண்யாவிடமும் அவரது காதலன் நவீன் குமாரிடம் தனித்தனியாக காவல் துறையினர் பேசியதை உரையாடல் வடிவில் காண்போம்...

மாணவி லாவண்யாவிடம் அங்கிருந்த போலீசார் பேச்சு கொடுத்தபோது...

ஏம்மா இதுக்கு அப்புறம் நீ அந்தப் பையனை கல்யாணம் பண்ணிப்பியா?

"இனி செத்தாலும் சாவேனே தவிர அவனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்"

சரிம்மா, அவன் உன் கழுத்தை அறுத்த நிலையிலும், அவன் மருந்து குடிச்சிருக்கான் அவனப் பாருங்கனு சொன்னியே?

"அவன் செத்துகித்து போயிருப்பானோன்னு பயந்தேன்"

என்னதான் உங்களுக்குள்ள பிரச்னை?

"சென்னைக்கு போயிட்டு வந்ததிலிருந்து பயங்கரமாக சந்தேகப்பட்டு பேசிவந்தான், சந்தேகமுள்ளவனிடம் எப்படி வாழ முடியும்?"

இப்போ எங்கோ போகப் போறிங்க?

"அம்மா, வீட்டுக்குத்தான் கூப்பிடுறாங்க..! எனக்கு எக்ஸாம் இருக்கிறது. உடம்பு சரியானதும் தையல் பிரித்த பிறகு எக்ஸாமை முடிச்சிட்டுதான் வீட்டுக்குப் போவேன். அவனை முழுசா மறக்க முயற்சித்துவருகிறேன்" என்றுள்ளார்.

கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நவீன் குமாரிடமும் அதே போல் பணியிலிருந்த போலீஸார் விசாரித்துள்ளனர்.

ஏன் தம்பி இப்படி பண்ணீங்க? (செல்போனை பார்த்தபடி முகம் கொடுத்து பேசாமல் பதில் சொன்னார்)

லாவண்யாவும் நானும் எட்டாவது படித்ததிலிருந்து காதலித்துவந்தோம். அவளைப் பார்க்கவே அவள் வீடு உள்ள தெருவிலிருக்கும் டீயூஷனுக்கு போயிட்டு வருவேன்.

சரிப்பா இப்ப ஏன் உங்களுக்குள்ள இப்படி ஒரு மோதல் ஏற்பட்டது. அதுவும் அவள் கழுத்தை அறுக்கும் அளவுக்கு?

நல்லாதான் இருந்தா...! அவ தோழி ஒருத்தி இருக்கிறா அவதான் சூனியக்காரி, அவள்தான் லாவண்யாவிடம் அவனை நீ திருமணம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. அவன் கேரக்டரே சரியில்லை என்று சொல்லியிருக்கிறாள். இதை லாவண்யா என்னிடம் சொல்லிவிட்டார். லாவண்யாவின் தோழிதான் எங்களைப் பிரிக்க சூழ்ச்சி செய்திருக்கிறார். சமீபகாலமாகத்தான் அவள் என்னிடம் சரியாக பேசாமலும் தவிர்த்துவந்தாள்.”

சரிப்பா ரெண்டு பெரும் செத்து பிழைத்திருக்கீங்க இதுக்கப்புறமும் அந்தப் பெண்ணை திருமணம் செஞ்சுப்பியா?

(மௌனமாக இருந்தவர் ஒரு நிமிடத்திற்குப் பிறகு) “லாவண்யா நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் நிறையச் செலவு செய்திருக்கிறேன்” என்று பதில் சொன்னார்.

(அவர் கையில் வைத்திருக்கும் கைபேசியில் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் வரும்போதெல்லாம் அவசரமாகவும் ஆர்வமாக லாவண்யாவிடம் இருந்து மெசேஜ் வருகிறதா என்று பார்க்கிறார்)

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாவண்யா, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நவீன் குமார் இருவரும் கைபேசியில் சிணுங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவப் பணியில் உள்ளவர்கள்.

கைதி செல்போன் பயன்படுத்தலாமா என்று காவல் துறை அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, “நவீன் குமார் மருத்துவ சிகிச்சையில்தான் இருக்கிறார். இன்னும் கைது செய்யப்படவில்லை, கைதுசெய்த பிறகு போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போதுதான் செல்போனுக்கு தடை விதிப்போம்" என்று குறிப்பிட்டனர்.

"இன்று (மே 4) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் கைதுசெய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் வாங்கிச்சென்று சிறையில் அடைப்போம். தேவைப்படும்போது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வோம் அப்போது அவர் கையில் செல்போன் பார்க்க முடியாது" என்றார் காவல் துரை அதிகாரி ஒருவர்.

காதலனும் காதலியும் உடல் வலியால் பிரிய வேண்டும் என்று வெளியில் பேசினாலும், இருவரிடமும் உள் மனதில் இணைந்து வாழ்வோமா என்ற எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இருவருமே அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை மொபைல் போன்களில் பார்த்து படித்துத்தான் வருகிறார்கள். நவீன் குமாரும் வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள முன்வர மாட்டார். லாவண்யாவும் நிம்மதியாக அடுத்தவரிடம் வாழ முடியாது என்பதை உணர்கிறார். இருவரும் மறு பிறவிகள் என்பதைக் கருதி இரு சமூகத்தினரும் இவர்கள் இணைந்து வாழவைக்க முன்வர வேண்டும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

எம்.பி.காசி

வெள்ளி, 4 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon