மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

விநியோகஸ்தர்களிடம் இறங்கி வந்த ரஜினி

விநியோகஸ்தர்களிடம் இறங்கி வந்த ரஜினி

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 63

இராமானுஜம்

இந்தி நடிகர் சத்ருஹன் சின்காவின் நடை, உடை நடிப்பு பாணியை தன் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார் ரஜினிகாந்த் என்பார்கள் திரையுலகில்.

சிகரெட்டை எல்லோரும் பற்ற வைப்பது போல் இல்லாமல் மாற்றி பற்ற வைத்தது தமிழ் சினிமா ரசிகர்களிடம் அவருக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது.

எதையும் மாறுபட்ட முறையில் அணுகும் நடைமுறைக்குப் பழகிவிட்ட ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடி வந்த நிலையில் உழைப்பாளி படத்தை தொடங்கி தனது பிரபலத்தை மூலதனமாக்கி படப்பிடிப்பை நடத்தினார்.

சம்பளத்துக்கு பதிலாக உழைப்பாளி படத்தின் NSC உரிமையை வாங்கிய ரஜினிகாந்த்துக்கு எதிராக வியாபார ரீதியாக அப்படத்துக்குத் தடை விதித்தார் சிந்தாமணி முருகேசன்.

தமிழ் சினிமா சார்ந்த திரைப்பட சங்கங்களில் அதிகாரம் மிக்கதும், பலம் மிக்க அமைப்பான விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக சிந்தாமணி முருகேசன் பொறுப்பில் இருந்த நேரம்.

அவரது முடிவுகளையொட்டியே அனைத்து விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இயங்கி வந்தன. உழைப்பாளி படத்தை வாங்குவதற்கும், திரையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டதை அறிந்து இந்திய சினிமா அதிர்ந்து போனது.

சினிமா சார்ந்த எந்த சங்க அலுவலகங்களுக்கும் போக வேண்டிய அவசியமில்லாத ரஜினிகாந்த் உழைப்பாளி படத்தின் NSC விநியோகஸ்தராக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் சிந்தாமணி முருகேசனைச் சந்தித்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள குறுகலான மீரான்சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் நேரில் வந்து சென்றது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான செய்தி ஆனது.

எஜமான் 1993ஆம் ஆண்டு வெளியானது. அதே வருடம் உழைப்பாளி படம் ரிலீஸ் ஆனது, இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. முந்தைய மன்னன், அண்ணாமலை படங்களைப் போல் உழைப்பாளி, எஜமான் கல்லா கட்டாததால் மாத்தி யோசிக்க தொடங்கினார் ரஜினி.

இனிமேல் சம்பளத்திற்கு பதிலாக NSC உரிமையை வாங்குவதில்லை என அறிவித்தார். அதே நேரம் பலம் மிக்க அமைப்புகளாக இருந்த விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுடன் உழைப்பாளி படம் தந்த அனுபவத்தில் நட்பு பாராட்டி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அருணாச்சலம் படத்தின் விநியோக உரிமையை வட ஆற்காடு நீங்கலாக அந்தந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர்களுக்கும், படையப்பா பட விநியோக உரிமையை சங்கத் தலைவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்தார் ரஜினி. இது சிந்தாமணி முருகேசன் - ரஜினிகாந்த் இருவருக்குமான நட்பினால் விளைந்த நன்மை என அன்றைய காலகட்டத்தில் திரைத்துறையில் பேசப்பட்டது.

1 கோடி சம்பளத்திலிருந்து 65 கோடி வாங்கும் நடிகராக ரஜினி இன்று மாறியிருக்கிறார். ஆனால் அவரது படங்களுக்கான வசூல் கூடவில்லை. அவர் நடிப்பில் 1999க்குப் பின்வெளியான அனைத்துப் படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்திவருகின்றன. அது பற்றி நாளை.......

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62

வெள்ளி, 4 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon