ரயிலில் பயணம் செய்யும்போது ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் தேநீர் வாங்கி அருந்துவது சிலருக்குப் பழக்கமாகவே இருக்கும். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு ரயிலில் தேநீர் அருந்த அனைவருமே யோசிப்பார்கள்.
தெலங்கானா ரயில் நிலையத்தில் கழிவறையில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி டீ, காபி போட்ட கேன்டீன் ஊழியரின் வீடியோ பரவியதை அடுத்து, ஒப்பந்தக்காரருக்கு இந்தியன் ரயில்வே ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது.
புனித் தியாகி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மே 1ஆம் தேதி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்வே டீ வியாபாரி ஒருவர், ரயில் கழிவறையில் உள்ள தண்ணீரை டீ கேனில் பிடித்துச் சென்றார். அந்த கேன்களை டீ தயாரிக்கும் இடத்தில் கொடுக்கிறார். சென்னை சென்ட்ரலிலிருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினர் விரைவு ரயிலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, ரயில்வே துறை மீது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை விசாரணை மேற்கொண்டது. செகந்திராபாத்- காசிபேட்டுக்கு இடைப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட டீ விற்பனையாளர் விவரம் கண்டறியப்பட்டு, ரூபாய் ஒரு லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டு, உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யப் பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.