மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 மே 2018

ரஜினிக்கு இது புதிதல்ல!

ரஜினிக்கு இது புதிதல்ல!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 62

இராமானுஜம்

தமிழ்த் திரைப்படத் துறை வேலை நிறுத்தம் தீவிரமான நிலையை எட்டியபோது ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தொழிலாளர்களை பாதிக்கும் வேலைநிறுத்தம் தேவையற்றது எனக் கருத்து தெரிவித்தார். திரைப்பட அமைப்புகள் ஒன்றுபட்டு அவர்களது கோரிக்கைகள் நிறைவேறப் போராடுகிறபோது அதற்கு எதிரான நிலைபாட்டை எடுப்பதும், கருத்து சொல்வதும் ரஜினிகாந்த் பழக்கம்.

நடந்து முடிந்த வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள் நலனுக்காக ஃபெப்சி தொழிலாளர்கள் தாமாக முன் வந்து வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். அதன் பின்னரே வேலை நிறுத்தம் அரசின் கவனத்திற்குள்ளானது.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நஷ்டத்தில் இருந்த காலத்தில் ரஜினிகாந்த் மன்னன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவரது முந்தைய படம் தளபதி ஹிட்டடித்த காலம். தனது சம்பளம் எவ்வளவு என்பதைத் தீர்மானிக்க முடியாத குழப்பமான மனநிலையில் இருந்த ரஜினிகாந்த், மன்னன் படத்தில் சம்பளத்திற்கு மாற்றாக செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஏரியா விநியோக உரிமையை வாங்கிக்கொண்டார். இது விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

1992இல் வெளியான மன்னன் சூப்பர் ஹிட்டடித்தது. NSCயில் படம் திரையிட்ட வகையில் வந்த வருவாய் 1 கோடிக்கு மேல். தளபதி படத்திற்கு 20 லட்சம் சம்பளம் வாங்கியிருந்த ரஜினிக்கு 1 கோடி என்பது இன்ப அதிர்ச்சியாக இருந்ததுடன், அடுத்து நடித்த எஜமான், அண்ணாமலை படங்களின் விநியோக உரிமையையும் சம்பளத்திற்கு பதிலாக வாங்கினார். அன்றைக்கு சென்னை - காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசன், ரஜினி நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். விநியோக உரிமையை வாங்கக் கூடாது என எச்சரித்தார். இது எதையும் சட்டை செய்யாமல், அண்ணாமலையில் அபரிமிதமான லாபம் பார்த்த ரஜினிக்கு எஜமான் வருவாய் ஏமாற்றமளித்தது.

1993இல் ஊதிய உயர்வு கோரி திரைப்படத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவந்தபோது விஜயா வாஹினி நிறுவனத்தின் தயாரிப்பில் உழைப்பாளி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வேலை நிறுத்தத்தின்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற தனது செல்வாக்கை பயன்படுத்தினார். சம்பளத்திற்கு பதிலாக NSC ஏரியா உரிமையை வாங்கிய ரஜினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆயத்தமான சிந்தாமணி முருகேஷன் அறிவித்த முடிவு இந்திய சினிமாவையே அதிர வைத்தது. அது என்ன முடிவு நாளை......

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 3 மே 2018