மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

தமிழகத்தில் புதிய கலை-அறிவியல் கல்லூரிகள்!

தமிழகத்தில்  புதிய கலை-அறிவியல் கல்லூரிகள்!வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழகத்தில் 7 புதிய தனியார் கலை -அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவருகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக 2011ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பிடெக் தகவல் தொழில்நுட்பம் (ஐடி), பிஇ கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது. மேலும், பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. 2015ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422 ஆக இருந்தன. இதில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டும் மொத்தமிருந்த 531 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,85,670 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 84,352 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,01,318 இடங்கள் காலியாக இருந்தன. இதன் காரணமாக 2016ஆம் ஆண்டில், இருக்கும் 70 துறைகளை (படிப்புகள்) குறைத்துவிட 30 கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைத்துவிட 20 கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்தன. இதனால், பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவருகிறது.

சென்னையில் உள்ள பிரபல தனியார் மற்றும் அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 11,000க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் புதிய கலை-அறிவியல் கல்லூரி தொடங்க விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. இதற்காக 2017 -18ஆம் ஆண்டு 67 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 2018-19 ஆண்டுக்கு 65 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இதில் 7 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மட்டும் 3 கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கின்றன என உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன், 2 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon