மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 மே 2018

வலை வீசப்பட்டது முதலைகளுக்கா, வேட்டையனுக்கா?

வலை வீசப்பட்டது முதலைகளுக்கா, வேட்டையனுக்கா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 61

இராமானுஜம்

தமிழ் படங்கள் ரிலீஸ் செய்வதற்கான தேதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை என்னும் சிறு படத் தயாரிப்பாளர்களின் ஆதங்கத்தை நேற்றைய தினம் பதிவுசெய்திருந்தோம். இந்த விஷயத்தில் சங்கம் நேர்மையோடுதான் நடக்க முயற்சிக்கிறது, முறைகேடாகத் தேதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை என்கிறார், தலைவர் விஷாலின் குரலாக மீடியாக்கள், சமூக வலைதளங்களில் தயாரிப்பாளர்கள் சங்கத் தகவலைப் பதிவிட்டுவரும் சங்கர்.

47 நாட்கள் வேலைநிறுத்தம் செய்த சங்கம் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்யப் போராடுகிறது. இதுவரை தங்கள் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி நினைத்தபடி காரியம் சாதித்துவந்த முதலைகள் கட்டுப்பட மறுத்து முரண்டு பிடிக்கின்றன. தணிக்கைச் சான்றிதழ் வாங்காமல் தேதி ஒதுக்கீடு கேட்டு அழுத்தம் கொடுக்கும் கொடுமையும் இங்கு நடக்கிறது. இவைகளைச் சமாளித்து யார் மனதும் கஷ்டப்படாமல் சங்க முடிவுகளை அமல்படுத்தப் போராடிவருகிறோம் என்கிறது தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பு.

படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காமல் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கியிருந்த தயாரிப்பாளர்கள்கூட சங்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். 2014இல் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களெல்லாம் ரிலீஸ் செய்ய தேதி கேட்டு வருவதால் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. 2017, 2018இல் தணிக்கையான படங்களை வெளியிட முன்னுரிமை கொடுக்கப்பட்டுப் பட்டியல் தயாரித்து தேதி முடிவு செய்யப்படுகிறது. அப்படி முடிவு செய்யப்பட்ட படங்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டால், அதற்கடுத்த தேதிகளில் திட்டமிடப்பட்ட படங்களுக்கு அந்த தேதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அந்த அடிப்படையில்தான் இருட்டு அறையில் முரட்டு குத்து, இரும்புத் திரை படங்கள் வெளியாகின்றன என்கிறார் சங்கர்.

இது பற்றி சிறு பட தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது சங்கத் தரப்பில் கூறப்படும் விளக்கம் உண்மையாகவே இருக்கட்டும். எல்லா கணக்குகளும் ஆன்லைனில் இருக்க வேண்டும், வெளிப்படைத் தன்மை வேண்டும் எனக் கேட்கிற தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம், தேதி ஒதுக்கீட்டை பகிரங்கமாக்கி, வெளிப்படைத் தன்மையை அமல்படுத்த ஏன் தயங்குகிறது என்று கேட்கிறார்கள். 2014லிருந்து இன்று வரை தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களைப் பட்டியலிட்டு தேதி ஒதுக்கீடு செய்திருக்கலாம். அப்படிச் செய்யும்போது யார் மீதும் சந்தேகம் வராது. இனியாவது தணிக்கைச் சான்றிதழ், தேதி கேட்டு விண்ணப்பிக்கும் தயாரிப்பாளரின் கடிதம், ஒதுக்கீடு செய்யப்படும் தேதி ஆகியவற்றைச் சங்க உறுப்பினர்கள் மட்டும் பார்க்கக்கூடிய இணைய வசதியைச் சங்கம் செய்ய வேண்டும் என்கின்றனர் சிறு படத் தயாரிப்பாளர்கள். சங்கம் செய்யுமா?

தயாரிப்பாளர்கள் சங்கம் மௌன சாமியாராக இருந்து காரியமாற்ற முயற்சிக்கிறது. அதனை பகிரங்கப்படுத்து என்கிறது விஷாலின் எதிர் தரப்பு,

நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற ‘தொட்ரா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தப் பிரச்சினை எதிரொலித்தது. விஷால் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் காமாட்சி பேசுகையில், சொந்தப் பணத்தை போட்டுப் படம் தயாரிக்கும் எங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்? 47 நாட்கள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் வெற்றிபெற்றதாக நாங்கள் நம்பிவிட்டோம். ஆர்.கே. செல்வமணி இயக்குநராகப் பேச வேண்டும் எனக் கிண்டலடித்தார்.

இதற்கு மேடையிலேயே உடனடியாக பதில் கூறிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

“யாருடைய தொழில் சுதந்திரத்தையும் பறிப்பது எங்கள் நோக்கமல்ல. ஐம்பது ஆண்டு காலமாகப் பொறுப்பில் இருந்தவர்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் உருவாக்கி அமல்படுத்தாமல் போனதால் தற்போது கட்டுப்பாடு, விதிமுறைகள் கொண்டுவரப்படுவது புதிதாக இருக்கிறது. இதைக் கடைப்பிடிக்கக் கஷ்டமாகத்தான் இருக்கும். பல முதலைகள் வலைக்குள் கட்டுப்பட மறுத்து வலையை அறுக்க முயற்சிக்கின்றன. வலையும் அறுபடக் கூடாது, முதலையும் அடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அனைத்துத் தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே முயற்சிக்கிறோம். உங்கள் பிரச்சினை என்னவென்று கூறுங்கள், தீர்த்து வைக்கிறோம்” என்றார்.

சுரேஷ் காமாட்சியிடமிருந்து இதற்கான பதில் இல்லை.

தற்போதையை கட்டுப்பாடுகள் காலா படத்திற்கும் பொருந்துமா, அமுல்படுத்தபடுமா, என்கிற விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. எல்லா காலகட்டத்திலும் திரைத் துறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஒற்றுமைக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்துவந்துள்ள ரஜினிகாந்தை தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கம் நெறிபடுத்தி ஒழுங்குபடுத்துமா அல்லது விட்டுக்கொடுத்துப் பழகுமா?

ரஜினியின் கடந்த கால அணுகுமுறைகள் நாளை......

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 2 மே 2018