மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 8 டிச 2019

குட்கா: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட்!

குட்கா: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட்!

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக, தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை எதிர்கொள்ள, திமுக தரப்பில் இன்று (மே1 ) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்றும், மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதேபோல குட்கா விவகாரத்தில் கடுமையான புகார்களுக்கு ஆளான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை’ என்றார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து அரசு அப்பீல் செய்யப் போவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து சில நாட்களாக தகவல் கசிந்து வருகிறது. இதை உணர்ந்துகொண்ட திமுக உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சட்டமன்றத்துக்குள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 21 பேர் குட்காவை கொண்டுவந்ததாக சொல்லி அவர்களுக்கு, சட்டமன்ற உரிமைக் குழு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உரிமை மீறல் புகார் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம். இன்னும் அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

செவ்வாய், 1 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon