மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

தமிழ் சினிமா: காற்றில் பறந்த கோட்டை முடிவுகள்!

தமிழ் சினிமா: காற்றில் பறந்த கோட்டை முடிவுகள்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 60

இராமானுஜம்

மரங்கள் நெடு நெடுவென வளர்ந்து செழிப்பாக இருக்கும். சிறு காற்றைக்கூட தாக்குப்பிடிக்க முடியாது முறிந்து போயிருக்கும், சில சமயங்களில் வேரோடு சாய்ந்துவிடும். சில மரங்கள் கடுமையான வறட்சியை ஏளனத்துடன் ஏறிட்டு நிமிர்ந்து பார்க்கும். அதிரி புதிரியாக அடிக்கும் காற்றையும் சமாளித்து நிற்கும் அம்மரங்கள் பலமான பக்க வேரின் பாதுகாப்புடன் பலசாலியாக நிமிர்ந்து நிற்குமல்லவா, அவைதான் விநியோகஸ்தர்கள்.

என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை சமாளித்து தன்னையும், தான் சார்ந்து இருக்கும் தயாரிப்பாளர்களின் நலனையும் காப்பார்கள். இன்றைய தமிழ் சினிமாவின் பக்க வேர், மரங்களை பலி கொடுத்துவிட்டு ஆணிவேர் மட்டும் உள்ள மரங்களை வளர்த்து வருகின்றனர், இதற்கு சமீபத்திய திரைத் துறையினர் வேலைநிறுத்தத்தின்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதை உதாரணமாகச் சொல்லலாம். இது சம்பந்தமாக தயாரிப்பாளர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ என்ன ஏதென்று கேட்கவில்லை. அதன் பலனை, தமிழ் சினிமா தற்போது அனுபவித்துக்கொண்டுள்ளது.

கமல் - ரஜினி படங்களைக் குறைத்துக்கொண்டபோது விநியோகஸ்தர்கள் தங்களை நம்பி தொழில் செய்யும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு புதிய படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அறிமுக நடிகராக திரையுலகில் வளர்ந்துவந்த விஜயகாந்த் வளர்ந்துவிடாமல் இருக்க அன்றைய நட்சத்திர நடிகர் கடுமையான முயற்சிகளை எடுத்தார் என்பது வரலாறு. அதனை முறியடித்து புரட்சிக் கலைஞராக, வசூல் சக்கரவர்த்தியாக கேப்டன் பிரபாகரன், உழவன் மகன், சின்ன கவுண்டர் என சீரான இடைவெளியில் வெற்றிப் படங்களை விஜயகாந்த் கொடுத்ததற்கு அடிப்படை காரணகர்த்தாக்கள் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள்.

வில்லனாக சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த சத்யராஜ் நாயகனாக வளர்ச்சியடையக் காரணம் விநியோகஸ்தர்களே. ஓடுகிற குதிரை சண்டித்தனம் செய்கிறபோது புதிய குதிரைகளை ஓடப் பழக்கவும் தங்களால் முடியும் என்பதை பல சூழல்களில் உறுதிப்படுத்திய கதை தமிழ் சினிமாவில் ஏராளம் உண்டு. அப்படிப்பட்ட முக்கியத்துவமிக்க விநியோகஸ்தர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவு அரசின் முன் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் டிஜிட்டல் கட்டணங்களைக் குறைக்க மறுக்கிறது டிஜிட்டல் நிறுவனங்கள். அதனைத் தட்டிக்கேட்க தயாரிப்பாளர்கள் சங்கம் தயங்குவதாகக் கேள்வி.

வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு முடிவுகளை அறிவித்தது. இவற்றில் படங்களை வெளியிட தேதி ஒதுக்குவது முக்கியமானது. வேலைநிறுத்தத்தில் கண்ணியமாகவும், நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் நடந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது மாற்றி யோசித்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

திரைப்படங்களின் வசூல், டிக்கட் விற்பனை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று உறுதியாக இருக்கும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம், படங்கள் வெளியீட்டு தேதியை ஒதுக்கீடு செய்வதில் எண்ணற்ற குளறுபடிகள் செய்வதாகக் கூறப்படுகிறது.

தணிக்கை சான்றிதழ் அடிப்படையில் வெளியீட்டு தேதி என அறிவித்த பின் அதனை தங்கள் வசதிக்கு ஏற்ப வளைத்துக்கொள்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி, அந்தப் படங்கள் எப்போது தணிக்கை பெறப்பட்டது என்பதை தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பது கிடையாது.

இரும்புத்திரை, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்திற்கு முன்பு தணிக்கையான படங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க, இந்தப் படங்கள் எப்படி ரிலீஸுக்கு தேதி ஒதுக்கப்பட்டது என்ற புகார்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன. சங்க நிர்வாகக் குழுவில் இல்லாத நபர்கள் தேதிகள் ஒதுக்கீடு செய்வதில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

தியேட்டர் கேட்டு போகும் தயாரிப்பாளர்களை அமரக்கூட சொல்லாமல் காத்திருக்கவைத்த சத்யம் சினிமாஸ் முனீர் கன்னையா கூட வேலைநிறுத்தத்திற்குப் பின் தயாரிப்பாளர்களை அமரவைத்து தியேட்டர் ஒதுக்கீடு செய்யும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறார். ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மாறவில்லை. தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய தேதி கேட்டு விண்ணப்பிக்கும் தயாரிப்பாளர்களிடம் அனைத்து தேதிகளும் ஃபுல்லாகிவிட்டன, ஜூலைக்கு மேல் மூன்று தேதி சொல்லுங்கள் என்கிறார்களாம். அப்படியென்றால் தணிக்கை சான்றிதழ் தேதி அடிப்படை தகுதி என்பது போலியானதா என்கிறார் ஜனவரியில் தணிக்கை சான்றிதழ் வாங்கியுள்ள சிறு பட தயாரிப்பாளர் ஒருவர். அதே நேரம் பெரிய படங்களுக்கும், நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட படங்களுக்கும் உடனடியாக தேதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவது எப்படி? இது போன்ற செயல்பாடுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் தனிநபர்கள் ஆதிக்கத்திற்கு அடிபணிந்துபோகிறதா என்கிற கேள்வியை எழுப்புகின்றனர் விஷால் எதிர் தரப்பினர்.

விநியோகஸ்தர்கள் அமைப்பு பலவீனப்பட்டு இருப்பதால் இது போன்ற தன்னிச்சையான முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் நடைமுறைப்படுத்த முடிகிறது. இந்த நிலை தொடருமேயானால் திரைப்படத் துறையில் தொழில் சுதந்திரம் கேலிப்பொருளாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. படங்கள் வெளியிடுவது சம்பந்தமாக விநியோகஸ்தர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தேதி முடிவு செய்துவந்த நிலை மாறிய பின், பிரம்மாண்ட படங்கள் தயாரிப்பவர்கள் எந்தவித முன் தகவலும் இன்றி ரிலீஸ் தேதியை அறிவித்து சிறு படங்களைச் சிதறவைத்து நஷ்டப்படுத்தியதில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படங்களுக்கு பெரும் பங்கு உண்டு...... அடுத்தது நாளை அப்டேட்டில்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59

செவ்வாய், 1 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon