மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 மே 2018

மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்: அமைச்சர்!

மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்: அமைச்சர்!

மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள வெள்ளாளபாளையத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று(மே 1) திறந்து வைத்தார். இதில், திருப்பூர் எம்.பி சத்தியபாமா, அந்தியூர் எம்.எல்.ஏ இ.எம்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து,அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, இயற்கை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழா நடைபெறுகிறது. அதனால், பள்ளி பருவத்திலேயே மரங்களை வளர்க்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஒவ்வொரு மாணவரும் மரக்கன்றுகளை நட்டு பேணிகாத்து வளர்க்க வேண்டும். பள்ளியின் ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும், 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதல்வர் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியிடுவார். இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கான புத்தகங்கள் நாளை வெளியிடப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.

அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 9 கல்லூரிகளில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதில் சமாளிக்கும் வகையில் சுமார் 3,145 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,இந்தாண்டு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளுக்கு இணையதள வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

செவ்வாய், 1 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon