மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

2019இல் ஆட்சி அமைப்போம்: ராகுல்

2019இல் ஆட்சி அமைப்போம்: ராகுல்

கர்நாடகா, சத்தீஸ்கர் போன்ற மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நேற்று(ஏப்ரல் 29) பேரணி நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

சோனியா காந்தி பேசுகையில், “மோடியின் ஆட்சியில் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வேதனைக்கும், பாதிப்புக்கும் ஆளாகியிருக்கிறார்கள். சிறுபான்மையினர், தலித் மக்கள் தாக்கப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இதுவரை பார்த்திராத வகையில், சமூகத்தில் வன்முறை அதிகரித்துள்ளது, பிரதமர் மோடியின் ஆட்சியில் தேசியம் மிகவும் கொந்தளிப்பான சூழலில் இருந்துவருகிறது.

மிகவும் மோசமான காலகட்டத்தை நோக்கி நம் தேசம் செல்கிறது. இந்த நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இந்த அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் சேர்ந்து நாட்டின் ஜனநாயக அமைப்புகளைச் சிதைத்துவருகின்றன. ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மோடி, அது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது, நான் ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் செய்யவும் விட மாட்டேன் என்று மக்களிடம் தெரிவித்தார். ஆனால், மோடியின் ஆட்சியில்தான் ஊழலின் ஆணிவேர்கள் வலுவடைந்திருக்கின்றன.

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. சிறு குழந்தைகளும் சிறுமிகளும்கூடப் பாதுகாப்பாக இல்லை.

ஆனால், சிறுமிகளையும், பெண்களையும் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை பாஜக அரசு பாதுகாக்கிறது. இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று மோடி உறுதியளித்தார். ஆனால், இன்னும் இளைஞர்கள் வேலையின்மையால் துன்பப்பட்டுவருகின்றனர்.

பொய்களும் நேர்மையின்மையும்தான் இன்றைய பாஜக ஆட்சியில் நிறைந்திருக்கின்றன. யாரெல்லாம் அரசின் சீர்கேடுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் நசுக்கப்படுகிறார்கள், அல்லது அரசின் பார்வையால் எரிக்கப்படுகிறார்கள்.'' என்று கூறினார்.

மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் மோடி நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் பாதுகாப்பிலும் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன, வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

மோடி அரசுக்கு எதிரான மனநிலை நாட்டு மக்களிடம் எழுந்துள்ளது. நாட்டில் சட்டம் ஓழுங்கு மிக மோசமாகிச் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.

மோடியின் அரசு நடக்கும் விதம் நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தும், அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கவிடாமல் பாஜக அரசு சதி செய்து முடக்கிவிட்டது.

நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாவிட்டால், அது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக முடியும் . இந்திய அரசியல் சாசனம் நமக்குக் கொடுத்திருக்கும் பரிசு ஜனநாயகம். அதை நாம் வலுப்படுத்த வேண்டும்.

ஆனால், இன்று அரசியல் சாசனம் கொடுத்த விஷயங்கள், அமைப்புகள் எல்லாம் உதாசீனப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற சூழல் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றாமலோ அல்லது விவாதத்துக்கு எடுக்காமலோ இருந்தால் அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து எனக் கொள்ள வேண்டும்.

வைர வியாபாரி நீரவ் மோடியும், மெகுல் சோக்சியும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தைக் கொள்ளையடித்து நாட்டை விட்டுத் தப்பி இருக்கிறார்கள். இதை நாம் ஒவ்வொருவரும் பார்த்தோம். இது நாட்டில் உள்ள வங்கிகளின் வலிமையையும் குறைத்துவிட்டது.

உலக அளவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருந்துவந்தது. சாமானிய மக்களைக் கடுமையாக பாதித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு ஏன் மோடி அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவில்லை” என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசுகையில், “’நான் எங்கு சென்று மக்களைச் சந்தித்து, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டால், அவர்கள் பாஜக அரசுமீது கடும் கோபத்தில் இருக்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். பிரதமர் மோடி செல்லுமிடங்களில் எல்லாம் வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருக்கிறார்.

கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசுகிறார். ஆனால், அங்கு பாஜகவின் முதல்வர் வேட்பாளராக உள்ளவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர். அது மட்டுமல்லாமல் நீரவ் மோடி நாட்டு மக்களின் பணத்தை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். பிரதமர் மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய்திறந்து பேசவில்லை. நாட்டில் ஜனநாயக அமைப்புகளை ஆர்எஎஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இணைந்து சிதைத்து வருவதை நாட்டின் காவல்காரர் என்று கூறிக்கொள்ளும் மோடி மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்கிறார்.

விவசாயிகள் பிரச்சினைகள் குறித்துப் பேச மறுக்கிறார். விவசாயிகள் கடன் பிரச்சினையால் சிக்கித் தவிக்கிறார்கள், அவர்களின் கடனை இதுவரை பிரதமர் மோடி தள்ளுபடி செய்யவில்லை, ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடிஅரசு கடன் தள்ளுபடி அளித்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு எடுக்காமல் இருந்திருந்தால், நிலம் முழுவதையும் மோடி அரசு அபகரித்திருக்கும். காங்கிரஸ் கட்சி மக்களிடத்தில் அன்பைப் பரப்புகிறது, ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்புணர்வைப் பரப்புகின்றன.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் அனைத்து மக்களும் ஒன்றுபோல நடத்தப்பட்டனர். ஆனால், பாஜகவின் ஆட்சியில் தலித்களும், சிறுபான்மையினரும் நசுக்கப்படுகிறார்கள். நாங்கள் சிறப்பாக அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரியை, ‘கப்பார் சிங் வரி’யாக மாற்றிவிட்டார்கள்.

பெண்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதுதான் பாஜக ஆட்சியா? இந்த ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் யார் என்பதை 2019இல் நிரூபிப்போம்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள், தலைவர்கள், இளம் தலைவர்கள் அனைவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைவரும் கருத்து சுதந்திரத்துடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். நாமெல்லாம் சிங்கக்குட்டிகள், உண்மைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே துணை நிற்க வேண்டும்” என்று பேசினார்.

ஞாயிறு, 29 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon