சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சீனா சென்றடைந்தார் .
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள கடந்த 24ஆம் தேதி சீனா சென்றனர். அப்போது சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்யீ இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிரதமர் மோடி சீனப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
வுஹன் நகரில் இன்றும் (ஏப்ரல் 27) நாளையும் நடக்க இருக்கும் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை டெல்லியிலிருந்து சீனா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
சீனா செல்லும் பிரதமர், அங்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதில் சீனா - இந்தியா எல்லை பங்கீடு குறித்தும், இதன் பிறகு மேற்கொள்ள இருக்கும் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் இருநாட்டு நல்லுறவு குறித்தும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.