மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

கமலுக்கு அமைச்சர் வேலுமணி பதில்!

கமலுக்கு அமைச்சர் வேலுமணி பதில்!வெற்றிநடை போடும் தமிழகம்

‘தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை’ என்ற கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார் தமிழக அமைச்சர் வேலுமணி.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோடைக் கொண்டாட்டச் சிறப்பு விற்பனைக் காட்சி நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) தொடங்கியது. இதை நேற்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின், ஜெயக்குமார் மற்றும் வேலுமணி இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, இந்த விற்பனைக் காட்சியில் தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 120 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கலந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார் வேலுமணி. “இங்கு 55 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கோடைக் காலத்துக்கேற்ப ஆடை வகைகள், அணிகலன்கள், மண்பாண்டங்கள், சிறுதானிய உணவுகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற காட்சியில் 55.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 44 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது” என்று கூறினார்.

நேற்று முன்தினம், உள்ளாட்சி அமைப்புகள் சரிவர இயங்குவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய வேலுமணி, கமல்ஹாசன் தெரியாமல் பேசுவதாகக் குறிப்பிட்டார். “கிராம சபையைப் பொறுத்தவரையில், அது சரியான முறையில் கூட்டப்படுகிறது. என்னென்ன தேதிகளில் கூட்டப்பட வேண்டுமோ, அன்று கூடுகிறது. ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் ஆகிய நாள்களில் இந்தச் சந்திப்புகள் நடக்கின்றன.

விலையில்லாத ஆடுகள் வழங்கும் திட்டம் போன்றவை கிராம சபையில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எதை வைத்து கமல்ஹாசன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. இதுபற்றி முழுமையாகக் கேட்டால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய வேலுமணி, மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

வியாழன், 26 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon