மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!வெற்றிநடை போடும் தமிழகம்

பள்ளி மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய பள்ளி கல்வித் துறை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப் பிறப்பித்த உத்தரவை ஜூன் 4ஆம் தேதிக்குள் அமல்படுத்தாவிட்டால், ஜூன் 5ஆம் தேதி தமிழகப் பள்ளி கல்வித் துறை செயலாளர், இயக்குநர், சென்னை மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளைத் தவறாக பேசியதற்காக ஊதிய உயர்வு நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன், “ஆசிரியர் கனகராஜின் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்த உத்தரவை ரத்து செய்து, எட்டு வாரங்களுக்குள் அவருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவர்கள், உளவியல் ரீதியாக எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என ஆய்வு செய்ய பள்ளி கல்வித் துறை இயக்குநர், மாவட்டத் தலைமை கல்வி அதிகாரி, கல்வியாளர்கள், உளவியல் ஆலோசகர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்கவும் நீதிபதி கேட்டிருந்தார். அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளி கல்வித் துறை செயலாளர், பள்ளி கல்வித் துறை இயக்குநர், சென்னை மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் வரும் ஜூன் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.

புதன், 25 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon