மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

இங்கிலாந்து வங்கியில் ரகுராம் ராஜன்?

இங்கிலாந்து வங்கியில் ரகுராம் ராஜன்?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், இங்கிலாந்து வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான போட்டியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து வங்கி (பேங்க் ஆஃப் இங்கிலாந்து) உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக மார்க் கார்னே பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டில் முடிவடைகிறது. இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுநரை அந்நாட்டின் வேந்தரான பிலிப் ஹம்மோண்ட் தேர்வு செய்வார். இதுபற்றி இங்கிலாந்தின் பிரபல இதழான ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ’மெக்சிகோவின் மத்திய வங்கியின் தலைவரான அகஸ்டின் கார்ஸ்டன்ஸைத் தேர்வு செய்வதைப் போலவே, சிகாகோவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனைத் தேர்வு செய்வதும் சிறப்பான மாற்றமாக இருக்கும்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் போன்ற சர்வதேச மன்றங்களில் இங்கிலாந்து வங்கிக்கான அடுத்த ஆளுநரைத் தேடத் தொடங்கிவிட்டதாக பிலிப் ஹம்மோண்ட் கூறியுள்ளார். இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுநர் பதவிக்கு ஃபைனான்சியல் கண்டக்ட் அதாரிட்டியின் தலைமை அதிகாரியான ஆண்ட்ரூ பைய்லி, நாணயக் கொள்கையின் துணை ஆளுநரான பென் பிராட்பெண்ட், சென்டன்டெர் யூ.கே.வின் தலைவர் ஷிரிதி வதேரா, இங்கிலாந்து வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் ஆண்டி ஹல்டேன், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் இயக்குநர் மினோச் சபிக் ஆகியோரையும் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது.

ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 24 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon