மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஏப் 2018

முதன்முறையாக நல்லதை காப்பி அடிக்கும் தமிழ் சினிமா!

முதன்முறையாக நல்லதை காப்பி அடிக்கும் தமிழ் சினிமா!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 56

இராமானுஜம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய வழிமுறையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. அறிமுக நிலையிலேயே இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சமபலத்தில் உள்ளது, தனது முடிவை அமல்படுத்துவதில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருக்கிறது.

இதுவரை படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் படத் தலைப்பைச் சங்கத்தில் பதிந்து ஒப்புதல் பெறுவதுடன் சரி, தயாரிப்பு சம்பந்தமாக எந்த ஒரு தகவல் பரிமாற்றத்தையும் சங்கத்துடன் வைத்துக்கொள்வது இல்லை. தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு ஒப்புதல் கடிதம் வாங்க வருவார் தயாரிப்பாளர். படம் வெளியீட்டுக்குத் தயாராகும்போது நடிகர்கள் சம்பள பாக்கி, தொழிலாளர்கள் சம்பள பாக்கி, ஃபைனான்ஸ் பஞ்சாயத்துகள் ஏற்பட்டால் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஓடிவருவார்கள் தயாரிப்பாளர்கள்.

சங்க உறுப்பினரைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் சங்கத்துக்கு இருப்பதால் பிரச்சினையை முடித்து, படம் வெளிவர சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பட வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்வார்கள். இதுபோன்ற நிலைமை இனி ஏற்படக் கூடாது என்பதால் படத்தயாரிப்புக்குத் தயாராகும் அறிமுக நிலையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்குத்தான் ஆதரவும் எதிர்ப்பும் சமபலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தோம்.

படம் தயாரிப்பது எங்கள் விருப்பம், எங்கள் தொழில் சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார் எனக் குரல்கள் எழும்புகின்றன. இவர்கள்தான் ஆந்திராவைப் பார், கேரளாவைப் பார்... அங்கெல்லாம் நடிகர்கள் சம்பளம் குறைவாக இருக்கிறது; இங்கு கோடிக்கணக்கில் இருக்கிறது எனப் பேசும் தயாரிப்பாளர்கள். இவர்கள் அங்குள்ள தொழில் சுயகட்டுப்பாடுகளைப் பற்றிப் பேசுவதில்லை. தெலுங்கில் எந்தத் தயாரிப்பாளரும் நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்ய முடியாது. படப்பிடிப்பு தினம்தோறும் எங்கு நடக்கிறது என்பதைத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தெரிவித்தாக வேண்டும் என்பதை அடிப்படை விதியாக வைத்திருக்கிறார்கள். அதை மீறினால் தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு ஒத்துழைப்பு தராது.

தொலைக்காட்சிகளில் ட்ரெய்லர், விளம்பரங்களைக் கொடுக்கும் வசதி இருக்கிறது என்பதற்காக இஷ்டப்படி செய்ய முடியாது. அனைத்தையும் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைக் காட்டிலும், சுயகட்டுப்பாட்டுடன் தயாரிப்பாளர்கள் நடந்து கொள்வதால் தெலுங்கு, மலையாளப் பட உலகம் வளமாக, ஆரோக்கியமாக உள்ளது. தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள் இதற்கு எதிராக இங்கு இருப்பதுதான் சிக்கலுக்குக் காரணம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்குக் கட்டுப்படுவது என்பதைவிட பொது வெளியில் எதிர்வாதம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். படம் தயாரிப்பவர்கள் இங்கு அதிகம் பேசுவதில்லை. எடுக்காதவர்கள்தான் இங்கு அதிகம் பேசுவதும், குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க ஸ்திரத்தன்மையை குலைத்துவிட அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. முடிவுகள் சரியா, தவறா என்பதைவிட அதை அமல்படுத்த முயற்சிக்கும் தலைமை நிர்வாகிகள் விமர்சிக்கப்படுவது பிரதானமாக உள்ளது. இதற்கு சில விளம்பர பத்திரிகையாளர்களை இவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் போக்கும் உள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுக்கோப்புடன் வேலைநிறுத்தத்தை நடத்தியதற்கு முன்னாள் தலைவர் கலைப்புலி தாணுவின் பங்களிப்பு முக்கியமானது. அவரது பெயரைப் பயன்படுத்தி தவறான செய்தியை வெளியிட்டு சங்க ஒற்றுமையைக் குலைக்கவும் பத்திரிகையாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். என்ன இடையூறுகள் வந்தாலும் படத்தயாரிப்புக்கு முன்பாக அதை ஒழுங்குபடுத்த சில கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்கிறார் சங்கப் பொருளாளர் பிரபு.

தமிழ் சினிமாவில் ஆர்வக்கோளாறில் படம் எடுக்க வருபவர்கள்தான் அதிகம். அதற்கடுத்தபடியாக நடிகர்கள் கால்ஷீட்டை வைத்து ஃபைனான்ஸ் வாங்கி படம் தயாரிப்பவர்கள் குறைவு. ஹீரோக்களே முதல் பிரதி அடிப்படையில் பிற நிறுவனங்களுக்குப் படம் தயாரித்துத் தருவது தற்போது நடைமுறையில் உள்ளது. சொந்த முதலீட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ், AGS என்டர்டெயின்மெண்ட், லைகா புரொடக்‌ஷன்ஸ் என மூன்று நிறுவனங்கள் மட்டுமே. ஆர்வக்கோளாறில் படம் தயாரிக்க வருபவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேசமயம், ஃபைனான்ஸியரை நம்பி படம் தயாரிப்பவர்களைத் தொடக்கத்திலேயே ஒழுங்குபடுத்திவிட்டால் பட ரிலீஸின்போது தேவையற்ற பஞ்சாயத்துகள் ஏற்படாது என்பதால்தான், கட்டுப்பாடுகள் அல்ல; சங்க முடிவுகளின் படி செயல்படக் கூறுகிறோம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்.

படப்பிடிப்புக்கு முன்பு நடிகர்கள் மற்றும் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களுடனான ஒப்பந்த நகலை ஒப்படைத்த பின்பே படப்பிடிப்புக்கு ஃபெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதிக் கடிதம் தருவது என்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருக்கிறதாம். திட்டமிட்டு ஒப்புதல் பெறப்பட்ட பட்ஜெட்டை மீறும்போது அதற்குக் காரணமானவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்கிறது. ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி சம்பளத்தைத் தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என்பதையும் அமல்படுத்த முயற்சிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முயற்சி வெற்றி பெறுமா பொறுத்திருப்போம்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 25 ஏப் 2018