மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 ஏப் 2018

சிறப்புக் கட்டுரை: தலித்துகளை இந்து மதத்திலிருந்து விரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்?

சிறப்புக் கட்டுரை: தலித்துகளை இந்து மதத்திலிருந்து விரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்?

ரவிக்குமார்

இந்தியா சுதந்திரமடைந்து எழுபதாண்டுகள் ஆன பின்னரும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எந்த நீதித் துறை குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருக்கும் என நம்பி, சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படும் சட்டங்களைச் சீராய்வு செய்யும் அதிகாரத்தை அதனிடம் அம்பேத்கர் ஒப்படைத்தாரோ அந்த நீதித் துறையே தலித் மக்களுக்கு அரணாக இருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தகர்த்தெறிகிற காட்சியை இப்போது பார்க்கிறோம். இந்து மதத்தில் இனியும் தலித்துகள் நீடிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியைத்தான் இது எழுப்பியுள்ளது.

1936ஆம் ஆண்டு தாதரில் நடைபெற்ற மாநாட்டில் நிகழ்த்திய உரையில் அம்பேத்கர் ஒன்றைக் குறிப்பிட்டார். ‘இப்போது உங்களுக்கு இருக்கும் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் சாதி இந்துக்களின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியாது. சிறுபான்மையினராக இருப்பதால் இந்த நிலை என நான் சொல்ல மாட்டேன். முஸ்லிம்கள்கூடத்தான் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் வம்புக்குச் செல்ல ஒருவரும் துணிவதில்லை. ஓர் ஊரில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தால்கூட பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் வம்பு செய்தால் இந்தியாவிலிருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்களுக்கு ஆதரவாக வருவார்கள் என்பது சாதி இந்துக்களுக்குத் தெரியும். தலித்துகளை ஒடுக்கினால் அவர்களுக்கு ஆதரவாக எவரும் வர மாட்டார்கள் என்பதால்தான் உங்கள்மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவதில்லை’ என்று அம்பேத்கர் சொன்னார். சாதியவாதிகளின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால் தலித் மக்கள் தமக்கான ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று சொன்ன அம்பேத்கர், அதற்காகத்தான் மதமாற்றத்தை முன்மொழிந்தார்.

‘இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால், இந்துவாக இறக்க மாட்டேன்’ எனச் சூளுரைத்த அம்பேத்கர் மதம் மாறும் முடிவை ஆத்திரத்திலோ, அவசரத்திலோ மேற்கொள்ளவில்லை. மதம் மாறுவது என அவர் அறிவித்ததற்கும் அவர் பௌத்தத்தைத் தழுவியதற்கும் இடையே இருபதாண்டுகள் எடுத்துக்கொண்டார். இடைப்பட்ட காலத்தில் சீக்கியம், இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் எனப் பல்வேறு மதங்களின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் அவர் ஆராய்ந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் மாநாடுகளைக் கூட்டி அங்கு பல்வேறு சமயத் தலைவர்களையும் அழைத்து அவர்களது கருத்துகளைக் கேட்டார். 1937இல் லக்னோவில் கூட்டப்பட்ட மாநாட்டில் பதின்மூன்று மதப் பிரிவுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சீக்கிய மதத்துக்கு மாறுவது பற்றித்தான் முதலில் அம்பேத்கர் அதிகம் ஆர்வம்காட்டினார். அந்த மதம் வீரத்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டதால் அது அவரை ஈர்த்தது. 1936இல் அமிர்தசரஸில் நடைபெற்ற சீக்கிய மாநாட்டில் அவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த தலித் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அம்பேத்கரோடு அம்மாநாட்டுக்குச் சென்ற சிலர் சீக்கிய மதத்துக்கு மாறவும் செய்தனர். ஆனால், சீக்கிய மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்த முயற்சி தொடரவில்லை.

இதனிடையில் அன்றைய அரசாங்கத்தில் இணைந்து செயல்படும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகளையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான காப்புக் கூறுகளை ஏற்படுத்தித் தருவதற்கு அவர் பயன்படுத்தினார். 1937 – 39இல் பம்பாய் சட்டப்பேரவையில் உறுப்பினராகவும்; 1942 முதல் 1946 வரை வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர்நலத் துறை உறுப்பினராகவும் இருந்த அம்பேத்கர், 1946 முதல் அரசியலமைப்புச் சட்ட அவையில் பங்கேற்று அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் மகத்தான பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

பௌத்தத்தை நோக்கிய பயணம்

பௌத்தத்தின் மீதான ஈடுபாடு அவருக்குச் சிறு பிராயம் தொட்டே இருந்தது. அவர் நான்காம் வகுப்பு மாணவராக இருந்தபோது கே.ஏ.கெலுஸ்கர் என்பவர் கூறிய புத்தரின் கதை தன்னை மிகவும் பாதித்தது என ‘புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தாக்கத்தினால்தான் 1934ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு ‘ராஜ கிருஹம்’ என அவர் பெயர் சூட்டினார். 1946இல் தான் துவக்கிய கல்லூரிக்கு சித்தார்த்தா கல்லூரி எனப் பெயரிட்டார். 1948இல் அவர் எழுதி வெளியிட்ட தீண்டாதார் குறித்த ஆய்வு நூலில் தலித் மக்களின் பூர்வமதமாக அவர் பௌத்தத்தைக் குறிப்பிட்டார். அதே ஆண்டில் சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசுவின் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ நூல் அவரது முன்னுரையோடு மறு பதிப்பு செய்யப்பட்டது.

கருத்தியல் ரீதியாக பௌத்தம் குறித்து அவர் பல பணிகளைச் செய்தாலும் 1954ஆம் ஆண்டில்தான் பௌத்தம் குறித்த பிரசாரத்தைக் கிராமப்புறத்தைச் சேர்ந்த தலித் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார். தெஹு ரோடு என்ற இடத்தில் தலித் மக்கள் சொக்கமேளருக்குக் கோயில் ஒன்றைக் கட்டி அதன் துவக்க விழாவுக்கு அம்பேத்கரை அழைத்தனர். அங்கு ஒரு புத்த விஹார் கட்டுவதாக இருந்தால் அங்கு தான் வருவதாக அம்பேத்கர் கூறிவிட்டார். அதனால் அங்கு புத்த விஹார் ஒன்று கட்டப்பட்டது. அதுதான் நவீன காலத்தில் மகாராஷ்டிராவில் கட்டப்பட்ட முதல் புத்த விஹார் ஆகும்.

இந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான முதன்மையான இரண்டு வேறுபாடுகளை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். இந்து மதம் கடவுளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால், பௌத்தம் ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது; இந்து மதம் ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கிறது. ஆனால், பௌத்தமோ சமத்துவத்தைப் போதிக்கிறது என அந்த முரண்பாடுகளை அவர் விளக்கினார். பௌத்தத்தை அவர் தழுவியபோது லட்சக்கணக்கான தலித்துகளும் பௌத்தர்களாக மாறினர். 1961ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் 28 லட்சம் தலித்துகள் பௌத்தர்களாக மாறியது தெரியவந்தது.

அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ஒழுக்கமின்மையும் சமத்துவமின்மையும் இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளன. அவற்றுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. அதனால், தலித் மக்கள்மீதான வன்முறை சென்ற நூற்றாண்டில் இருந்ததைவிட இப்போது பல மடங்கு கூடியிருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றமோ இந்த யதார்த்தத்தைப் பார்க்கக் கண் இன்றி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகள் என்கிறது. இந்த நிலையில், அம்பேத்கர் எண்பதாண்டுகளுக்கு முன்னால் எழுப்பிய கேள்விகளை தலித் மக்கள் இப்போது மீண்டும் உரக்க எழுப்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆர்ப்பரிக்கும் கேள்விகள்

“உங்கள் மனிதத் தன்மையை மதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்? உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தராத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்? உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்? உங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவமதிக்கிற மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்?” என்ற அம்பேத்கரின் கேள்விகள் இப்போது தலித் மக்களின் மனதில் கடல் அலையாய் ஆர்ப்பரிக்கின்றன.

அம்பேத்கரின் வழியில் மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் நம்மைப் பாதுகாக்கும், இந்த நாட்டிலிருந்து ஒழுக்கமின்மையும், ஏற்றத்தாழ்வும் களையப்படும் என்ற நம்பிக்கையில் அவரது மறைவுக்குப் பின் கடந்த அறுபதாண்டுகளாக தலித் மக்கள் பொறுமை காத்தனர். மக்களுக்காகத்தான் மதமேயொழிய மதத்துக்காக மக்கள் இல்லை என்பதை அறியாதவர்கள் தமது சுயநலத்துக்காக இன்று அந்த அரசியலமைப்புச் சட்டத்தையே தகர்க்க முற்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அப்படிச் செய்கிறார்களென்றால் எந்த நீதித் துறை குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் என அம்பேத்கர் நினைத்தாரோ அந்த நீதித் துறையே இன்று தலித்துகளை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தத் துணிந்துவிட்டது என்னும்போது அதனால் பாதிக்கப்படும் தலித் மக்கள் இனி எதைப் பாதுகாவலனாகக் கருதுவது? எந்த அமைப்பை நோக்கி முறையிடுவது?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மட்டுமல்ல, அது சட்டத்தின் பெயரால் இழைக்கப்பட்டுள்ள அநீதி மட்டுமல்ல, தலித் மக்களை இந்து மதத்தை விட்டு விரட்டும் முயற்சியுமாகும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு திருத்தப்படாவிட்டால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து அதற்குப் பாதுகாப்பு அளிக்கப்படாவிட்டால் அம்பேத்கர் 1956இல் மேற்கொண்ட முடிவைத்தான் தலித் மக்கள் எடுக்க வேண்டியதிருக்கும். அப்படி நிகழ்ந்தால் அதற்கு இந்த ஆட்சியாளர்களும் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் செயல்படும் நீதி அமைப்பும்தான் பொறுப்பு.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: முனைவர் ரவிக்குமார்... அரசியல், கலை, இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 24 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon