மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஏப் 2018

காலா கட்டுப்படுமா, கழட்டிவிடப்படுமா?

காலா கட்டுப்படுமா, கழட்டிவிடப்படுமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 54

இராமானுஜம்

தமிழ்த் திரைப்படங்களின் தணிக்கை சான்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பாளர் ஒப்புதல் பெறப்பட்டு ரிலீஸ் தேதி தீர்மானிக்கப்படும் என்று வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது உறுதி கொடுக்கப்பட்டது. இதில் தயாரிப்பாளர்கள் சங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக நடிகர்களின் தகுதிக்கு ஏற்ப திரையரங்குகளின் எண்ணிக்கையைத் தீர்மானித்து அமல்படுத்த வேண்டிய சிரமமான காரியம் உள்ளது.

தற்போது வெளிவர உள்ள படங்களுக்கு சங்க முடிவுக்குட்பட்ட எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்குமா என்பதே சந்தேகம் என்பதால் தயாரிப்பாளர்கள் சங்க முடிவு மீறப்பட வாய்ப்பு இல்லை.

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது, ரஜினிகாந்த் நடித்திருக்கும் காலா, சங்க முடிவுகளை அமல்படுத்துகிறதா என்பதைப் பார்ப்பதற்காகத்தான். தங்களுக்கு இருக்கும் வியாபார முக்கியத்துவம், நட்சத்திர அந்தஸ்து, ரசிகர் கூட்டம் இந்த மிதப்பில் பிரபல நடிகர்களின் படங்கள் சங்க முடிவுகளை மீறுவது தமிழ் சினிமாவில் சாதாரணமானது. அதிலும் ரஜினிகாந்த் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும் காலங்கள் தமிழ்த் திரைப்படத் துறைக்குச் சோதனையான காலங்களாகவே சிவாஜி படத்திலிருந்து இருந்துவருவது மறுக்க முடியாத உண்மை.

சென்னை நகரத்தில் படங்கள் திரையிடுவது சிவாஜிக்கு முன்பு ஐந்து அல்லது ஏழு திரையரங்குகள் மட்டுமே. பட ரிலீஸுக்கு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். ஆனால், சிவாஜி படம் இந்த நடைமுறையை மீறி 17 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரஜினி நடித்த படங்களில் தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான முதல் படம் சிவாஜி. அன்றைக்குத் தமிழகத்தில் 1,600 திரையரங்குகள் செயல்பாட்டில் இருந்தன. டிஜிட்டல் வடிவத்துக்குத் திரையரங்குகள் முழுமையாக மாறிய பின், பட்ஜெட் படங்கள்கூட பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டன. பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் அன்று மாயாஜால், அபிராமி மெகா மால், ரோகிணி காம்ப்ளக்ஸ் ஆகிய தியேட்டர்கள் முழுமையும் ஒரே படத்தை முதல் மூன்று நாள்களுக்குத் திரையிட்டு குறுகிய நாள்களில் அதிக வசூல் என்கிற பழக்கத்தை உருவாக்கினார்கள். இது தமிழகம் முழுவதும் பரவியதால் சிறு நகரங்களில்கூட இரண்டு, நான்கு தியேட்டர்களில் ஒரே படத்தை திரையிடும் பழக்கம் ஏற்பட்டது. இதனாலேயே பிற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை உருவானது.

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது இரண்டாவது, மூன்றாம் நிலை நடிகர்கள் நடித்த படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினர். சிறு படத் தயாரிப்பாளர்கள் நசுக்கப்பட்டனர். இந்த நிலை மாற தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி முடிவெடுக்கும். அந்த முடிவைச் சங்க நிர்வாகிகளே மீறினார்கள். தற்போது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகக் குழு, பட வெளியீட்டைத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி அடிப்படையில் பட ரிலீஸ் தேதி நிச்சயிக்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் காலா திரைப்படம் ஜூன் 7 அன்று ரிலீஸ் எனத் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களுக்கு திரையரங்குக் கட்டுப்பாடுகள் காலா படத்துக்கு அமல்படுத்தபடுமா, இல்லை கட்டவிழ்த்து விடப்படுமா என்பதே திரையுலகினரின் கேள்வியாக உள்ளது.

ரஜினிகாந்த் நடித்து 2007இல் வெளியான சிவாஜி படத்துக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான குசேலன், எந்திரன், கோச்சடையான், லிங்கா, கபாலி ஆகிய நான்கு படங்களும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்குகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்ற கணக்கில் ரஜினிகாந்த் நடிப்பதால் அவரது முந்தைய படம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தும் தேவையைக் கருதி அதிக விலைக்கு விற்கப்படுவதும் வாங்கி நஷ்டப்படுவதும் தொடர்கிறது. ரஜினிகாந்த் நடித்த படங்கள் வெளியாகும்போதெல்லாம் மூன்று மாதங்கள் தமிழ் சினிமா ஸ்தம்பித்து உள்ளது. பொருளாதார முடக்கம், புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற நிலை உருவாகி சகஜ நிலைக்கு வர சில மாதங்கள் ஆகிவிடும். ஏப்ரல் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருந்த காலா அரசியல் காரணங்களால் ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரூ.125 கோடி கொடுத்து விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. விநியோக உரிமை வாங்கிவிட்டு தமிழ்நாடு முழுவதும் அவுட் ரேட் அடிப்படையில் விலை கூறப்பட்டு வருவதால் படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட கபாலி 500, 300 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்து வேலூர் ஏரியா விநியோகஸ்தருக்குக் கிடைத்த வருவாய் 2.50 கோடி ரூபாய், இதில் தியேட்டர் மினிமம் கேரண்டி தொகையும் அடக்கம். நஷ்டம் 50 லட்சம். காலா படத்துக்கு இந்த ஏரியாவுக்கான விலை ரூ.5 கோடிக்கும் மேல் கூறப்படுகிறது கபாலிக்கு GST, 8% கேளிக்கை வரி கிடையாது. கபாலி போன்று அதிக திரையரங்குகளில் வெளியிடவும், 150 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யவும் தயாரிப்பாளர்கள் சங்க விதி அனுமதிக்காது. திரையரங்குகள் கட்டுப்பாடு, டிக்கெட் கட்டண வரைமுறைப்படுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காலா 100 நாள்கள் தியேட்டரில் ஓடினாலும் அசல் தேறுவது கடினம். இந்தச் சூழலில் இருந்து காலா வழக்கம் போல சங்க விதிகளை மீறப் போகிறதா இல்லை சங்கம் கட்டுப்படுத்தி முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறதா? பொறுத்திருப்போம்.....

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 23 ஏப் 2018