மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஏப் 2018

இடத்தைக் கை விட்டுவிட்டுக் கோட்டையைக் கட்ட திட்டம்!

இடத்தைக் கை விட்டுவிட்டுக் கோட்டையைக் கட்ட திட்டம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 53

இராமானுஜம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட விநியோகம், திரையிடல் இவற்றில் 1980களில் இருந்த வழிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் மூத்த தயாரிப்பாளர்கள். ஜனநாயக ரீதியாகச் சங்க உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நேற்றைய தினம் ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்பட்டுவரும் திரைப்படக் கூட்டமைப்புடன் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பல திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்கள் சுயமாகச் செயல்படாமல் முடங்கிப் போனதற்கு காரணமான அமைப்பு இது. தமிழ் சினிமாவில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருபவர்களின் கடன்களைப் பட வெளியீட்டுக்கு முன் வசூல் செய்வது மட்டுமே இந்த அமைப்பின் முழு நேர வேலை.

விநியோகத்துறையில் புதிதாக வந்து தமிழ்நாடு உரிமையை வாங்குவதற்கு நினைத்தால் எளிதாகப் படத்தை வாங்கிவிட முடியாது. அப்படியே வாங்கினாலும் எளிதாக ரிலீஸ் செய்துவிட முடியாது. அதற்கான அனைத்து முட்டுக்கட்டைகளையும் திரைப்படக் கூட்டமைப்பின் எடுபிடிகள் செய்வார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ‘கொடிவீரன்’ திரைப்படம்.

வானொலி நிலைய வித்வான்கள் போன்று இந்த அமைப்பில் சிலர் இருக்கிறார்கள். தலைவர், செயலாளர்கள் மாறினாலும் இவர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள். நடந்து முடிந்த சினிமா வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த நிலைய வித்வான்கள் முக்கியத்துவம் இழந்துபோனார்கள். இதற்குக் காரணமானவர்களுக்கு எதிர்வினை ஆற்றத் திட்டமிட்டிருந்த சூழலில் தமிழ்த் திரைப்படத்தைச் சீரமைக்கத் திரைப்பட கூட்டமைப்பைத் தேடி சென்றது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம்.

தனிநபர் ஐந்து தியேட்டர்களுக்குக் குத்தகைக்கு எடுத்து நடத்தக் கூடாது என்றும் கரூர், சேலம் சிண்டிகேட் தியேட்டர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து படம் கன்ஃபாம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அனைத்து ஏரியா விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேச, வருகின்ற ஏப்ரல் 26 அன்று சென்னையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. யானை வாயில் இருந்து புலி வாயில் சிக்கிய கதை இது என்கின்றனர் திரைத்துறையினர்.

கொங்கு மண்டலத்தில் திருப்பூர் சுப்பிரமணியைக் கட்டுப்படுத்த ராஜமன்னார் நடத்தும் நாடகம் இது என்கின்றனர் கோவை சினிமாக்காரர்கள். வேலூர் சீனிவாசனின் தொழில்முறை பங்குதாரர் ராஜமன்னார். இவர்கள் இருவரும் இணைந்து தென்மாவட்டங்களில் தியேட்டர்களைச் சீரமைத்து வருகின்றனர். இவர்களுக்குப் போட்டியாளர் திருப்பூர் சுப்பிரமணி மட்டுமே. அவரை அப்புறப்படுத்த திரைப்படக் கூட்டமைப்பைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது.

தங்களுடைய பலம் என்னவென்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் சங்கம் தடுமாறுவதாக இதிலிருந்து எளிதாகப் புரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் திரையரங்கு சிண்டிகேட் அமைப்பில் கர்ண கொடூரமானவர்கள் கரூர் தியேட்டர் நிர்வாகிகள். தியேட்டர்களைத் தனிநபர்கள் குத்தகைக்கு எடுத்து நடத்துவது 1980களில் இருந்து தொடங்குகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசகராகச் செயல்படும் கேயார் அதிகளவு தியேட்டர்களை லீஸுக்கு எடுத்து நடத்தியவர் தான். அன்றைக்கு இரு தரப்பிலும் குறைந்தபட்ச நேர்மையும் நாணயமும் இருந்தது. இன்றைக்கு அது இல்லாததால்தான் தடுமாறுகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். அதனால்தான் அரசு முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அசுரபலம் மிக்கது. இதை அமல்படுத்தினால் தியேட்டர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்பது புரியாமல் வேறு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் படங்களுக்கு ஒரே மாதிரியான பங்கு தொகை உறுதிப்படுத்த வேண்டும். அதை மீறுவோர் தொழில் ரீதியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற முடிவுகளே தயாரிப்பாளர்கள் சங்கம் நினைத்ததைச் செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கிறது. ஆனால், அதை விடுத்து தனிநபர்களை குறிவைத்துப் பழிவாங்க முற்படுவது இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடுவது போன்றது. திரைப்படக் கூட்டமைப்புக்கு பிற சங்கங்களைப் போன்று தேர்தல் நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுக்க வேண்டும்

நாளை காலை 7 மணிக்கு காலா கட்டுப்படுத்தப்படுமா? கட்டவிழ்க்கப்படுமா?

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 22 ஏப் 2018